நாடாளுமன்றத்தில் இந்தியாவைப் பற்றி குரல் எழுப்புவேன்: கனிமொழி எம்.பி. பேச்சு
சென்னையில் நடைபெற்ற ஆய்வு அறிக்கை வெளியீட்டு விழாவில் கனிமொழி எம்.பி. பேசினார்.
சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் ஒர்க் வளாகத்தில் தமிழ்நாட்டில் நாடோடிப் பழங்குடிகளின் நிலை பங்கேற்பு ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது. நாடோடி பழங்குடிகளின் நிலை குறித்தான ஆய்வறிக்கை வெளியீடு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.
வானவில் ட்ரஸ்ட், சமூகச் செயல்பாட்டுக்கான ஆராய்ச்சி நிறுவனம் (ROSA) மற்றும் நாடோடி இனத்தவர் மற்றும் பழங்குடிகள் தன்மேம்பாட்டு மையம் (TENT) இணைந்து தமிழ்நாட்டில் உள்ள எட்டு மாவட்டங்களில் நரிக்குறவர், பூம்பூம் மாட்டுக்காரர்-ஆதியன், லம்படா, காட்டுநாயக்கர் ஆகிய நான்கு நாடோடிப் பழங்குடியினரிடையே விரிவான பங்கேற்பு ஆராய்ச்சி மேற்கொண்டது.
அந்த ஆய்வறிக்கை குற்றப்பரம்பரைச் சட்டம் ஆகஸ்டு 31,1952-ம் ஆண்டு திரும்பப்பெற்றதை நினைவுகூரும் வகையில் 71 ஆவது விமுக்தா தினத்தையொட்டி ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிகழ்சியில் கலந்து கொண்டு அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள நாடோடிப் பழங்குடிகளின் உரிமைகளையும்,தேவைகளையும் புரிந்துகொள்வதிலும் மேம்படுத்துவதிலும் இந்த ஆய்வறிக்கை முக்கியமான மைல்கல்லாக இருக்கும். தமிழக அரசு என்பது எல்லோருக்குமான ஒன்று. எல்லோரையும் ஒருங்கிணைத்து, எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று நினைத்த பெரியார் வழியில் வரக்கூடிய அரசு தமிழ்நாடு அரசு.
இது தமிழ்நாடு மாடலாக மட்டும் முடிந்து விடாமல், இந்திய அளவிலே, நிச்சயமாக நாடாளுமன்றத்திலும் இது பற்றி குரல் எழுப்புவோம். தற்போது இந்தியா என்று சொல்ல வேண்டுமா? இல்லையா? என்று பல குழப்பங்கள் இருக்கின்றது. நமக்கு அது எப்போதும் இந்தியா தான். As an Indian, I will definitely raise it in Indian Parliament. (ஒரு இந்தியன் என்ற முறையில் இதை இந்திய நாடாளுமன்றத்தில் நிச்சயம் எழுப்புவேன்) என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் கிருஸ்துதாஸ் காந்தி, JAG NT/DNT தலைவரும் திரைப்பட இயக்குநருமான டாக்சின் பஜ்ரங்கே, ஆதியன் பழங்குடியினர் கழகத்தின் தலைவர் வீரய்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu