மழைக்காலத்தில் பரவும் புளூ காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டது. வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக இன்று தான் தொடங்கி இருக்கிறது என்றாலும் அதற்கு முன்பாகவே அக்டோபர் மாதம் முழுவதும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து உள்ளது. பருவமழை தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் சளி, காய்ச்சல் போன்ற வியாதிகள் மக்களிடம் வேகமாக பரவி வருகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
பருவ மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல்களில் மிக முக்கியமானது புளூ காய்ச்சல். இந்த காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி என்பது பற்றி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி ரங்கராஜன் தெரிவித்துள்ள ஆலோசனைகளை பற்றி பார்ப்போமா?
குழந்தை பருவத்தில் உடல் உறுப்புகள் வளர்ச்சி அடையும். மேலும் பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை ப்ளூ காய்ச்சல் வருவது வழக்கமானது தான். இந்த காய்ச்சல் ஆறு நாட்கள் வரை இருக்கும். உரிய சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தி விடலாம். புளூ காய்ச்சல் நுரையீரலை பாதிக்க கூடியது. இரண்டு முதல் ஆறு நாட்கள் வரை காய்ச்சல் நீடிக்கும். சளி, உடல் வலி, தலைவலி, இருமல் தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு நிமோனியா எனப்படும் உடலில் நீர் இழப்பு மற்றும் நீர் பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டால் காய்ச்சல் வந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ப்ளூ காய்ச்சலுடன் எச்1 என்1 என்னும் ஒருவகை இன்புளுயன்சா வைரஸ் கிருமி தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. ஆகவே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். இதற்கு மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது.
காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது முதலில் ஈரத்துணியால் உடலை துடைக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது உடல் வெப்பம் குறைய தொடங்கும். பிறகு ஒரே ஒரு பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்து செல்ல வேண்டும். எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ரத்த பரிசோதனை அவசர சிகிச்சை முறைகள் 24 மணி நேரமும் வழங்கப்படுகின்றன. எனவே தாமதிக்காமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். காய்ச்சல் இருந்தால் உடலில் வேகமாக நீர் இழப்பு ஏற்படும் அந்த நேரத்தில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓ.ஆர். எஸ். அரசு மருத்துவமனையில் இலவசமாக கொடுக்கப்படுகிறது. அது தவிர பழச்சாறு வகைகள் அரசு மருத்துவமனையில் கிடைக்கும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
புளூ காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பொதுவாக கை, கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நன்கு சூடாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறி சூப், அசைவ சூப் சாப்பிடலாம் வெளியிடங்களுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை கடைப்பிடித்து முக கவசம் அணிய வேண்டும். காய்ச்சல் இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஒரு லிட்டர் தண்ணீரில் நான்கு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் உப்பு கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.
இவ்வாறு டாக்டர் ஜெயந்தி ரங்கராஜன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu