மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
தமிழகம் முழுவதும் மின் இணைப்பு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அரசு மானியத்திற்கான பலன்களைப் பெற விரும்பும் அனைத்து மின் நுகர்வோருக்கும் ஆதார் இணைப்பு மிகவும் முக்கியமானது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய உத்தரவின்படி, வீட்டு நுகர்வோரின் மின் சேவை இணைப்புகளை அவர்களின் ஆதாருடன் இணைக்கும் பணியை மின்வாரியம் (TANGEDCO) தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜேஷ் லகோனி கூறுகையில், மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை இணைப்பதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. nsc.tnebltd.gov.in, nsc.tnebltd.gov.in/adharupload என்ற இணையதளத்தில் சென்று தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம். இதில் தங்களது மின் நுகர்வோர் எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, ஆதார் அட்டையின் நகலை பதிவேற்றுவதன் மூலம் ஆன்லைனில் இணைக்கலாம். நுகர்வோருக்கு மானிய விலையில் மின்சாரம் தொடரும் என்றும், ஆதார் இணைப்பு முறையான தரவை உருவாக்குவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அனைத்து தமிழ்நாடு மின்சார வாரிய நுகர்வோர்களும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மானியம் பெறுபவர்கள் குறித்த சரியான தரவுகளை உருவாக்க வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். முதல் 100 யூனிட்டுகளுக்கு அரசு மானியம் பெற ஆதாரை இணைப்பது கட்டாயம். ஆதாரை இணைக்காதவர்களுக்கு மானியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆதார் எண் இணைப்புக்குப் பின்னரே மின் கட்டணத்தை வசூலிக்க உள்ளதாகவும், இதன் காரணமாக கட்டணம் செலுத்த 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணையவழியிலும், நேரடியாகவும் மின் கட்டணத்தை வசூலிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கு, நவம்பர் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை இறுதி நாள் உள்ள தாழ்வழுத்தப் பிரிவு மின்நுகர்வோர் அனைவருக்கும் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படுகிறது.
ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இவ்வாறு அவகாசம் வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் ஆதார் இணைப்புக்குப் பிறகு, எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை, மின் கட்டண வசூல் மையங்கள் வாயிலாக நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
- முதலில், அதிகாரப்பூர்வ இணையதளமான nsc.tnebltd.gov.in/adharupload என்ற முகவரிக்குச் செல்லவும்.
- TANGEDCO முகப்பு பக்கம் தோன்றும்.
- அதில் உங்களது TANGEDCO சேவை இணைக்கப்பட்ட எண்ணை (மின் இணைப்பு எண்) உள்ளிடவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்தால், பின்னர் உங்களுக்கு OTP குறுஞ்செய்தியாக வரும்.
- OTP ஐ உள்ளிட்டு உங்கள் TANGEDCO கணக்கைச் சரிபார்க்கவும்.
- TANGEDCO கணக்குகளுடன் இணைக்க உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- பின்னர் ஸ்கேன் செய்யப்பட்ட ஆதார் அட்டையை JPG/PNG அல்லது PDF வடிவத்தில் பதிவேற்றவும்.
- இறுதியாக, Submit என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஒப்புகை ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu