தமிழகத்தில் நக்சல்பாரிகள் நுழைந்தது எப்படி?- வால்டர் தேவாரம் (பகுதி 5)

தமிழகத்தில் நக்சல்பாரிகள் நுழைந்தது எப்படி?- வால்டர் தேவாரம் (பகுதி 5)
X

வால்டர் தேவாரம்.

தமிழகத்தில் நக்சல்பாரிகள் நுழைந்தது எப்படி?- என்பது பற்றி வால்டர் தேவாரம் விவரிக்கிறார். அதனை இன்று பகுதி 5 ல் காணலாம்.

தமிழக காவல்துறை ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. வால்டர் தேவாரம் தனது பணிக்காலத்தில் நடந்த முக்கியமான சம்பவங்கள், துப்பாக்கி சூடு, என்கவுண்டர்கள் பற்றி அளித்த பேட்டியை இன்ஸ்டா நியூஸ் இணைய செய்தி தளம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தனது முதல் துப்பாக்கி சூட்டை நடத்திய வால்டர் தேவாரம் அதன் பின்னர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கு சென்று அங்கு பெரிய பிரச்சினையாக இருந்த நில பிரபுக்கள்- விவசாய தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கூலி பிரச்சினையை ஒரு தீர்வுக்கு கொண்டு வந்த விதம் பற்றி அளித்த பேட்டியை பார்த்தோம்.

நக்சலைட் பிரச்சினை

இந்த பிரச்சனை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது தமிழகத்தின் மற்றொரு பகுதியான கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் புதிதாக நக்சல் பாரிகள் எனப்படும் நக்சலைட் பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்தது.

அந்த காலகட்டத்தில் நக்சல் பாரிகள் இயக்கத்தினர் நமது அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் அதிக அளவில் வேரூன்றி இருந்தனர். மேற்கு வங்காளத்தில் இருந்து ஒரு பிரிவினர் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்களது இயக்கத்திற்கு புதிதாக ஆட்களை சேர்ப்பதற்காக தமிழகத்தில் வந்து இறங்கினார்கள். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தேவாரத்தை அந்தப் பகுதிக்கு அனுப்ப முடிவு செய்தார். தேவாரம் அங்கு போய் என்ன செய்தார் நக்சலைட்டுகளின் ஊடுருவலை எப்படி ஒழித்தார் என்பது பற்றி இன்றைய பகுதி ஐந்து தொகுப்பில் காணலாம்.

கொள்கை என்ன?

பொதுவாக நக்சலைட்டுகள் தீவிரவாதிகள் போன்றவர்கள். அவர்கள் தங்களுக்கு என ஒரு கொள்கையை உருவாக்கிக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு பாடுபடுவதாக கூறி ஜனநாயகம் மற்றும் தேர்தல் பாதைக்கு எதிராக ஆயுதப் புரட்சி மூலம் செல்வந்தர்களை தாக்கி பணம் நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து வந்தனர். இதற்காக காடுகளில் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தனர்.

இது பெரிய தலைவலியான ஒரு பிரச்சனை. நக்சலைட்கள் ஊடுருவிய மாநிலங்கள் இந்தியாவில் இன்று வரை கடும் தொல்லைகளை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இப்பொழுது கூட அவ்வப்போது நக்சலைட் தாக்குதல் சம்பவங்கள் நடப்பது உண்டு.

காரணம் அங்கெல்லாம் நக்சலைட் தீவிரவாதிகள் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் ஊடுருவிய நக்சலைட்டுகளை தேவாரம் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் முளையிலேயே கிள்ளி எறிந்ததால் நக்சலைட் பிரச்சனைக்கு அப்பொழுதே தமிழகத்தில் தீர்வு காணப்பட்டு விட்டது ‌.

தஞ்சாவூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த வால்டர் தேவாரம் பதவி உயர்வு பெற்று வேலூர் பகுதிக்கு டி. ஐ. ஜி. ஆக சென்றார். அப்போது அவருக்கு பிரதான பணியாக நக்சலைட் ஒழிப்பு பணி வழங்கப்பட்டது.

சாரு மஜும்தார் வந்தார்

நக்சல் பாரிகள் இயக்கத்தை தோற்றுவித்த சாரு மஜும்தார் மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தார். தமிழகத்தின் ஒகேனக்கல் பகுதியில் அவர் முகாமிட்டார் என்று கூறும் தேவாரம் ஒகேனக்கல் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் ஒரு ட்ரை ஜங்ஷன் போன்ற மலைகள் நிறைந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அப்போது நிலவி வந்த வறுமை வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டு திசை மாறிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்களது சிந்தனைக்கு மாற்றி அரசுக்கு எதிராக குறிப்பாக போலீசாருக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வருவதே அவர்களது கொள்கை என குறிப்பிட்ட தேவாரம் அவர்களை கட்டுப்படுத்தியது எப்படி என்பது பற்றியும் கூறுகிறார்.

ஊரடங்கு போன்ற நிலை

வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக தேவாரம் பதவி ஏற்ற போது ‌ வேலூர் நகரம் மிக மோசமான நிலையில் இருந்தது. மாலை 6 மணிக்கு மேல் சாலையில் மக்கள் நடமாட்டமே இருக்காது. கடைகள் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு விடும். பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கும் எப்போது மூடப்படும் என்று தெரியாது. காரணம் நக்சலைட் தாக்குதலுக்கு பயந்து மக்கள் அப்படி ஒரு அறிவிக்கப்படாத ஊரடங்கு போன்ற நிலைமைக்கு மாறி இருந்தனர். இந்த சூழல் வால்டர் தேவாரத்திற்கு அங்கு கால் பதித்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை எப்படி தீர்ப்பது என்பதற்காக கடும் முயற்சியில் இறங்கினார். கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்.

நக்சலைட்டுகள் பெரும்பாலும் செல்வந்தர்களை தாக்கி கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்தனர். அந்த காலகட்டத்தில் தமிழகம் ஆந்திராவில் வறுமை நிலவி வந்தாலும் கேரள மாநிலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் சம்பாதித்த பணத்தை கொண்டு வசதி படைத்தவர்கள் நிறைய வாழ்ந்து வந்தனர். அவர்களை தாக்கி கொள்ளையடிப்பதையும் நக்சலைட்டுகள் ஒரு இலக்காக வைத்திருந்தனர்.

அடையாளம் காண்பதில் சிக்கல்

இதில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால் நக்சலைட்டுகள் யார் என்பதை அடையாளம் காண முடியாது என்கிறார் தேவாரம். அதாவது அவர்கள் பகல் நேரங்களில் காடுகளில் மறைந்து இருந்தாலும் இரவில் கிராமங்களுக்குள் வந்து விடுவார்கள் கிராம மக்களுடன் ஒன்றிணைந்து விடுவார்கள். மக்களும் அவர்களை எளிதில் வெளியே காட்டிக் கொடுக்க முடியாத மனநிலையில் இருந்தனர். அதனால் அவர்களை அடையாளம் கண்டு பிடிப்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது போலீசாருக்கு.

போலீஸ் அறிவுரை

அப்போதைய ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டம், வேலூர், தர்மபுரி இந்த மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் நக்சலைட் இயக்க தலைவர்களின் போதனைக்கு மயங்கி அவர்களது முகாமில் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களை அங்கு செல்வதை தடுத்து நிறுத்தி நல்வழிப்படுத்துவதற்காக கிராமம் கிராமமாக சென்று நாங்கள் முதலில் அவர்கள் அங்கு செல்வதை கட்டுப்படுத்தினோம் என்ற தேவாரம். போலீஸ் அறிவுரை கேட்டு திருந்திய இளைஞர்கள் மன்னிக்கப்பட்டார்கள். போலீசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்களை அரசாங்கமே சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதால் போலீஸ் நடவடிக்கை தீவிரமாக இருந்தது.

இக்கட்டான சூழல்

ஆனாலும் அவர்களை அடையாளம் கண்டு சுட்டுக் கொல்வது என்பது எளிதான காரியம் அல்ல.ஏனென்றால் அவர்கள் மக்களுடன் மக்களாக கலந்து இருந்ததால் அப்பாவி மக்கள் பலியாகி விடக்கூடாதே என்பதிலும் போலீசார் கவனமாக இருக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழல் இருந்தது. இந்த சூழலில் நக்சலைட்டுகளை எப்படி தனிமைப்படுத்தி அவர்களது நடவடிக்கையை ஒழித்தார். அதற்காக நடத்தப்பட்ட 10 என்கவுண்டர்கள் என்பது பற்றி தேவாரம் கூறுவதை நாளை பார்க்கலாம் ( இன்னும் வரும்).

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!