கட்டணமில்லா பேருந்து பயணத்தால் பெண்களின் மாத சேமிப்பு எவ்வளவு? ஆய்வில் தகவல்

கட்டணமில்லா பேருந்து பயணத்தால்  பெண்களின் மாத சேமிப்பு எவ்வளவு? ஆய்வில் தகவல்
X
தமிழ்நாட்டின் ஆறு நகரங்களில் பல்வேறு வயது மற்றும் சமூக-பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த பெண்களிடம் நேர்காணல் நடத்தியது.

2021 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று, தமிழ்நாடு அரசு பெண்களுக்கான "கட்டணமில்லா அரசுபேருந்து" திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஜூலை 2021-இல் நடைமுறைக்கு வந்தது. 2021-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கொள்கையானது, கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் நோக்கம் பெண்களை சமூகத்தில் அதிக அளவில் செயல்படுவதை ஊக்குவிப்பதாகும் என்பதை வலியுறுத்துகிறது.

இத்திட்டமானது பாராட்டுகளையும் விமர்சனங்களையும் சமமாக பெற்றுள்ளது. பெண்கள் அதை ஏற்றுக்கொண்டனர், வல்லுநர்கள் பாராட்டினர், ஆனால் விமர்சகர்களோ பெண்களுக்கான இந்த 'இலவசம்' கடினமாக உழைக்கும் ஆண்களால் மட்டுமே சாத்தியமானது, இத்திட்டம் இயல்பாகவே நியாயமற்றது, பாரபட்சமானது, பெண்கள் இந்த திட்டத்தை உபயோகமில்லாமல் பயன்படுத்துகிறார்கள் என்று குறை கூறினர்.

சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் என்பது 38 வருடங்கள் பழமையான ஒரு இலாப நோக்கற்ற மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்பாகும், இது குடிமக்கள் உரிமைகள் மற்றும் நல்லாட்சிக்காக செயல்படுகிறது. அதன் முயற்சிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் கூட தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும், சென்னையின் நுகர்வோர் மற்றும் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இது முதன்மையாக செயல்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டில், திட்டத்தின் தாக்கம் மற்றும் நிலையான பொது போக்குவரத்திற்கான அணுகலை இது எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்து உள்ளது. கட்டணமில்லா பேருந்து திட்டத்தால் பயனடைந்த 3000 பெண்களை சிஏஜி நேர்காணல் செய்தது.

தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் ஆகிய ஆறு நகரங்களில் இருந்து பல்வேறு வயது மற்றும் சமூக-பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த பெண்களிடம் நேர்காணல் நடத்தியது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், இந்த அறிக்கையை பிப்ரவரி 20 நடந்த நிகழ்வில் வெளியிட்டார்.

இந்த ஆய்வை வரவேற்ற டாக்டர். ஆல்பி ஜான், "இந்தத் திட்டம் பெண்களுக்குச் சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது, ஏனெனில் அவர்களில் பலர் சொந்த வாகனங்களை வைத்திருக்கவில்லை. அதிகமான பேருந்துகளின் தேவையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்கு இத்தேவையை பூர்த்தி செய்ய அரசு தற்போது செயல்பட்டு வருகிறது" என்றார்.

இந்த ஆய்வின் மூலம், ஆறு நகரங்களிலும் கண்டறியப்பட்டவை:-

இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, பெண்கள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர். இப்பெண்கள் ஏற்கனவே பேருந்து சேவையை வழக்கமாகப் பயன்படுத்திய நிலையில், இத்திட்டத்தின் விளைவாக ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் போன்ற பிற போக்குவரத்து வகைகளைப் பயன்படுத்துவது குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில், பெண்கள் ஒரு மாதத்தில் சுமார் 800 ரூபாய் சேமிப்பதால், அந்தப் பணம் வீட்டுத் தேவைகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்குச் செலவழித்து, குடும்பம் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் சிறந்த பலன்களை ஏற்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வில் இருந்து மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், அதிகமான பெண்கள் பொதுப் போக்குவரத்தை அணுகுவதும், பொது இடங்களில் காணப்படுவதும், இது பாலின நிலைப்பாடுகள் மற்றும் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு தொடர்புடைய தடைகளை உடைக்க உதவியது என்பது தெரியவந்துள்ளது.

சிஏஜியின் மூத்த ஆராய்ச்சியாளர் சுமனா நாராயணன் கூறுகையில், இந்தத் திட்டம் பெண்களுக்கு சராசரியாக மாதம் 800 ரூபாய் சேமிக்க அனுமதித்துள்ளது. மேலும் அவர்கள் இந்த சேமிப்பை தங்கள் குடும்ப ஆரோக்கியம், கல்வி மற்றும் ஊட்டச்சத்துக்காக மறு முதலீடு செய்கிறார்கள். இது சமூகத்திற்கும் நாட்டிற்கும் நீண்டகால நன்மைகளை அளிக்கிறது.

கட்டணமில்லா பொது போக்குவரத்து திட்டமானது வரி செலுத்துவோரின் பணத்தால் மட்டுமே கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் இலவச டிக்கெட்டுகள் வழங்குவது சாத்தியம் என்று கருதாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பையும், மேலும் இந்தத் திட்டம் மூலம் சமூகத்தில் அனைத்து தரப்பினரின் உள்ளடக்கத்திற்கு அனுமதிக்கிறது

இந்தத் திட்டம் பெண்களை நோக்கமின்றி வீட்டை விட்டு வெளியேறவும், ஊர் சுத்தவும் ஊக்குவிக்கிறது என்று பொதுக் கருத்து உள்ளது. பெண்கள் இப்போது பொழுதுபோக்கிற்காகவும் தனிப்பட்ட நேரத்திற்காகவும் கோவில்கள், கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்வதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். பெண்களுக்கும் அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு சில பொழுதுபோக்கு தேவை, இது ஒரு நேர்மறையாக பார்க்கப்பட வேண்டும்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பசுமை போக்குவரத்து தீர்வுகளை மையமாக கொண்டு செயல்படும் ஆராய்ச்சி நிறுவனமான அர்பன் ஒர்க்ஸ் நிறுவனர் ஸ்ரேயா கடப்பள்ளி கூறுகையில், இந்தியாவில், ஆண்களில் 10ல் 8 பேர் வெளியே பணிபுரியும் பொழுது, பெண்களில் 10ல் 2 பேர் மட்டுமே வீட்டிற்கு வெளியே வேலை செய்கிறார்கள். இது போன்ற திட்டங்கள் தொழிலாளர் பணிக்குள் நுழைவதில் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளை குறைக்கிறது

நீண்ட காலத்தில், பேருந்துகள் அனைவருக்கும் விருப்பமான போக்குவரத்து முறையாக இருக்க வேண்டும். அங்கு செல்வதற்கு, குடிமக்களுக்கு பேருந்து நிறுத்தங்களுக்கு எளிதான அணுகல் மற்றும் குறைந்த காத்திருப்பு நேரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!