கண்ணிவெடி தாக்குதலில் 22 பேர் பலியான திகில் சம்பவம் பற்றி தேவாரம் (பகுதி 8)
வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ்.
தமிழக காவல்துறையில் டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்ற வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ். தனது பணிக்காலத்தில் நடந்த முக்கிய என்கவுண்டர் சம்பவங்கள் பற்றி அளித்த பேட்டி 'இன்ஸ்டாநியூஸ்' இணைய செய்தி தளத்தில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுவரை 7 பகுதிகள் பப்ளிஷ் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று எட்டாவது பகுதியாக சந்தன கட்டை கடத்தல் காரன் வீரப்பன் வேட்டையில் நடந்த திகில் சம்பவங்களை பற்றி தேவாரம் பகிர்ந்து உள்ளார். அது என்ன என்பதை அறிய தொடர்ந்து பார்ப்போம்.
நிலக்கண்ணி வெடி தாக்குதல்
தேவாரம் கடந்த தொடரில் ஏற்கனவே கூறி இருந்தது போல வீரப்பன் ஒரு இருதயம் இல்லாத மனிதன் என்றே கூற வேண்டும். குறி பார்த்து சுடுவதில் வல்லவன் ஆன வீரப்பன் யானைகளின் தந்தத்தை எடுப்பதற்காக அவற்றை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றிருக்கிறான். அவனால் இப்படி ஏராளமான யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் தன்னை பிடிக்க வந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளை நிலக்கண்ணிவெடி தாக்குதல் மூலம் எப்படி கொன்று குவித்தான் என்பதை தெரிந்தால் தேவாரம் கூறியது உண்மை என்றே நினைக்க தோன்றும்.
அப்படி ஒரு சம்பவம் வால்டர் தேவாரம் வீரப்பன் பதுங்கி இருந்த காட்டுப் பகுதிக்குள் சென்றபோது நடந்தது அது பற்றி அவர் கூறுவது என்ன என்பதை இனி காணலாம்.
22 பேர் கொலை
கர்நாடக மாநில போலீசார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வீரப்பனை பிடிப்பதற்காக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மற்றும் பி.எஸ். எஃப். எனப்படும் துணை இராணுவப் படை வீரர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை படை அமைக்கப்பட்டது.
அந்த படைக்கு நான் தலைமை தாங்கி இருந்தேன். ஒருநாள் நாங்கள் வீரப்பனை பிடிப்பதற்காக காட்டுக்குள் சென்றோம். நாங்கள் ஆறு குழுக்களாக பிரிந்து சென்றிருந்தோம். அன்றைய தினம் கர்நாடக போலீசார் அடங்கிய குழு ஒன்று வீரப்பன் வைத்திருந்த நிலக்கண்ணி வெடி தாக்குதலில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 22 போலீசார் வீர மரணம் அடைந்தனர். கண்ணிவெடி தாக்குதலில் அவர்கள் உடல் சிதறி இறந்ததும் வீரப்பன் மற்றும் அவனது ஆட்கள் போலீசார் வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை அள்ளி சென்று விட்டனர். அதிர்ஷ்ட வசமாக அன்று வீரப்பனை பிடிக்கும் பணியில் இருந்த டி.எஸ்.பி. அசோக்குமார் உயிர் தப்பினார்.
ஒரே நாளில் 22 போலீசார் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முதலமைச்சர்கள் உடனடியாக அவசர ஆலோசனை நடத்தினார்கள். இதன் மூலம் வீரப்பனை எப்படியாவது பிடித்தே தீரவேண்டும் என தீவிர நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவுகள் வழங்கப்பட்டன. அதன் விளைவாக வீரப்பனை பிடிப்பதற்காக பெரிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது.
தப்பி ஓடினான்
அதன் அடிப்படையில் நாங்கள் மீண்டும் வீரப்பனை பிடிப்பதற்காக காட்டுக்குள் எங்களது பயணத்தை தொடங்கினோம். நாங்கள் முக்கிய பாதை வழியாக சென்று கொண்டிருந்தோம். இன்னொரு பாதையில் டி.எஸ்.பி. அசோக்குமார் தலைமையில் ஒரு குழு சென்றது. காவிரி கிளை ஆறு ஒன்றை கடக்க முயன்ற போது வீரப்பன் கண்ணிவெடி பதுக்கி வைத்திருக்கலாம் என தகவல் கிடைத்ததால் மிகவும் எச்சரிக்கையுடன் சென்றோம். அப்போது ஒரு காவலர் வீரப்பனும் அவனது ஆட்களும் அந்த பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கொடுத்தார். உடனடியாக நாங்கள் துப்பாக்கியால் சுட்டோம். இந்த நேரத்தில் வீரப்பனும் அவனது ஆட்களும் ஆற்றில் குதித்து தப்பி ஓடினார்கள். வீரப்பனை அருகில் நெருங்கிச் சென்று பிடிக்க முடியாமல் போனது அன்றைய தினம் ஒரு துரதிஷ்ட நாளாக அமைந்தது. எனவே, வீரப்பனை பிடிப்பதற்கான வியூகத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இன்னும் கூடுதலான போலீஸ் படையுடன் வீரப்பனை பிடிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
விஜயகுமார் வந்தார்
இதற்கிடையில் நான் காவல்துறையில் இருந்து ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டது. டி.ஜி.பி.யாக நான் ஓய்வு பெற்றாலும் வீரப்பனை பிடிக்கும் சிறப்பு குழுவில் என்னைத் தொடர்ந்து பணியாற்ற முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் ஒரு தொடர் நடவடிக்கையாக பி.எஸ்.எஃப். படை பிரிவிலிருந்து போலீஸ் அதிகாரி விஜயகுமார் வரவழைக்கப்பட்டார். அவர் ஃபீல்டு கமாண்டராக நியமிக்கப்பட்டார் நான் ஒட்டுமொத்த ஃபீல்டு கமாண்டராக நியமிக்கப்பட்டேன். கூடுதல் பலத்துடன் வீரப்பனை பிடிக்கும் வேட்டை தொடர்ந்தது.
பலம் குறைந்தது
அப்போது வீரப்பனை பிடிக்க முடியவில்லை என்றாலும் அவனது ஆட்கள் பலரை நாங்கள் என்கவுண்டர் செய்தோம். இதில் அவன் பலம் முழுமையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இறுதியாக விஜயகுமார் தலைமையிலான குழுவினர் வீரப்பனை என்கவுண்டர் செய்து அவனது கதையை முடித்தனர் என்று கூறிய தேவாரம் தான் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாக சென்னையில் ஈழத் தமிழ் போராளிகள் குழுக்களுக்கு இடையே நடந்த சண்டை அதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் பற்றி விவரிக்கிறார். அதனை நாளை பார்க்கலாம் (இன்னும் வரும்).
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu