ஆசிரியர்கள் படுகொலைக்கு உள்துறை அமைச்சகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளியொன்றில் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் ஒருவர் என 2 பேர் கொல்லப்பட்டனர். இதே போன்று கடந்த செவ்வாய் கிழமை 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரத்திற்குள் பள்ளி மீது மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பயங்கரவாத தாக்குதல்களில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தேசிய ஆசிரியர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .
தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ம.கோ.திரிலோகச்சந்திரன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் பகுதியில், அனைத்து ஆசிரியர் சமுதாயமும் அஞ்சத்தக்க வகையில் ஆசிரியர்களை கொடூரமாக கொலை செய்துள்ளது ஆசிரியர் சமுதாயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திட்டமிடப்பட்ட மற்றும் வெறித்தனத்தின் உச்சமாக அமைந்துள்ள இத்தகைய செயல்களினால், நேர்மையாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் தனது பணிகளை செவ்வனே செய்து வரும் ஆசிரியர்களை தங்களுடைய புனிதமான கடமைகளிலிருந்து தள்ளிவைக்க செய்துவிடும். தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு இத்தகைய செயல்களை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் தண்டனையானது ஆசிரியர் சமுதாயத்தின் மீது வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டும். மேலும், ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் மாநில நிர்வாகத்தையும் ஜம்மு-காஷ்மீரில் பரிபூரண அமைதி நிலவிட மத்திய உள்துறை அமைச்சகம் உரிய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், உயிர் இழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு அரசு வேலையும், அவர்களுடைய குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ஒரு கோடி ரூபாயும் அளிக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu