கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்

கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டதாகவும், திருநெல்வேலி, நாகப்பட்டினம், நாமக்கல் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மார்ச் 31 ஆம் தேதிக்குள் மாவட்ட குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 11 மாவட்டங்களில் மே மாத இறுதிக்குள் மாவட்ட குழுக்கள் நியமிக்கப்படும் என உறுதி தெரிவிக்கப்பட்டது.

தை பதிவு செய்த நீதிபதிகள், மே மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட குழுக்கள் நியமிக்கப்படாவிட்டால் அறநிலையத் துறை செயலாளரும், ஆணையரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி வரும் என எச்சரித்தனர். மேலும், மாவட்ட குழுக்கள் எத்தனை நாட்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என அறநிலையத் துறை தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தவறினால், அறங்காவலர் நியமன பணிகளை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மாவட்ட குழுக்களில் அரசியல் கட்சியினர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், அரியலூர் மாவட்ட குழுவில் இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அரசியல் கட்சியை சேர்ந்த கடவுள் பக்தி உள்ளவரை நியமிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்து அல்லாதவர் நியமிக்கப்பட்டு இருந்தால், அதை எதிர்த்து தனியாக தான் வழக்கு தொடர முடியும் எனவும், இந்த வழக்கில் விசாரிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil