ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பா? -ஆளுநர் கொடுத்த விளக்கம்

ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பா? -ஆளுநர் கொடுத்த விளக்கம்
X
தமிழ்மொழி பிரதானப்படுத்தப்படும் என சுற்றறிக்கையில் உள்ளது. இதை நான் உறுதிசெய்துள்ளேன். ஆகவே இதை சர்ச்சையாக்க வேண்டாம் -ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

கடந்த மாதம் 29 ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் "ஜிப்மர் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பதிவேடுகள், பணி புத்தகங்கள், பணி கணக்குகள் ஆகியவற்றின் பொருள்களும், பத்தி தலைப்புகளும் முடிந்தவரை இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும், எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே இவை அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிக்கப்படுவதாக கூறி பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்தி திணிப்பு குறித்து ஆளுநர் தமிழிசை விளக்கமளித்துள்ளார். இது குறித்து ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலுடன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

ஜிப்மரில் இந்தி திணிப்பு இருப்பதாக கருத்து நிலவி வருகிறது. நிர்வாக ரீதியான சுற்றறிக்கை தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டது. ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை. அது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தி சர்ச்சை தொடர்பான போராட்டம் தேவையற்றது. மருத்துவமனைக்கு இடையூறு செய்ய வேண்டாம். தமிழ்மொழி பிரதானப்படுத்தப்படும் என சுற்றறிக்கையில் உள்ளது. இதை நான் உறுதிசெய்துள்ளேன். ஆகவே இதை சர்ச்சையாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!