முன்னாள் அமைச்சர் ஆவடி நாசருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு..!
முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர். (கோப்பு படம்).
தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஆவடி நாசர். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவரின் பதவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறிக்கப்பட்டது. இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். அப்போது வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும், தடுக்க முயன்ற தன்னை ஆபாசமாக பேசியதுடன், தன் மீது காரை ஏற்ற முயற்சித்ததாகவும் அதிமுகவைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், ஆவடி நாசர் மீது, மிரட்டுதல், தவறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இதுதொடர்பான வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நாசர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மீதான விசாரணை நீதிபதி ஜெயசந்திரன் முன்பு இன்று வந்தது.
அப்போது, நாசர் தரப்பில், தனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தெளிவற்றதாக உள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையின் போது மட்டுமே நாசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிருபிக்க முடியும் என்பதால், ஆவடி நாசர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், நாசர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால், விசாரணை நடைபெற்று வரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிப்பது குறித்து பரீசிலிக்கும்படி பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu