பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்).

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் அமல்படுத்தப்படுவதை மாநில அரசு கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறி வருகின்றனர். உண்மையில் இது பாசிட்டிவான விஷயமாக இருந்தாலும் கூட பெண்கள் சில துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் தான் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் பஞ்சாலைகள், டெக்ஸ்டைல் மற்றும் ஸ்பின்னிங் மில்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி வருவதை சுட்டிக்காட்டி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழிற்சாலைகள், ஸ்பின்னிங் மில் மற்றும் வேறு பணியிடங்களில் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில், பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க மாட்டார்கள் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் அமல்படுத்தப்படுவதை மாநில அரசு கட்டாயமாக கண்காணிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், பதிவான புகார்கள், தீர்க்கப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறித்த பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதைச் செய்ய தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் புகாரளித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags

Next Story