ஆதீன மடத்திற்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

ஆதீன மடத்திற்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
X

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள், நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவிலில், தீய சக்திகள் மற்றும் நோய்களின் பிடியிலிருந்து விடுபட, 'பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி பூஜை' சிறப்பு வழிபாடு செய்யப்படுவது வழக்கம்.

இந்த பூஜை செய்ய பக்தர்களிடம் அலுவலர்கள் கட்டணம் வசூலித்ததில், 2 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகவும், இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவில் 2019ல் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும், துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ராதாகிருஷ்ணன் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கணக்குகளை பராமரிப்பதில் சில முறைகேடுகள் நடந்தது. அறநிலையத்துறை ஆணையருக்கு புகார் அனுப்பி, இதில் ஈடுபட்ட நபர்களை நீக்கி, கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து சடங்குகளும் ஆதீனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் நடத்தப்படுகின்றன. ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் 28,504.33 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், 222.84 ஏக்கரை பலர் ஆக்கிரமித்துள்ளனர். காசிதர்மத்தில் ஏற்கனவே 699.27 ஏக்கர் நிலம் இருந்தது.

ஆனால், 688.65 ஏக்கர் மட்டுமே மடத்தின் பெயரில் உள்ளது. மீதமுள்ள நிலங்கள் சில தனி நபர்கள் வசம் உள்ளது. மடத்திற்கு சொந்தமான நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 2021ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நிறைவேற்ற நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு, கோவில்களின் பெயரில் பணம், நன்கொடைகளை, ஊழியர்கள் பக்தர்களிடம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். புகார் வந்தால் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில்களின் சமய செயல்பாடுகள் முறையாக, வெளிப்படையாக நடைபெற வேண்டும். பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவை மூலம் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்கள் ஆதாயம் பெற அனுமதிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அவற்றை பின்பற்றி மனுதாரர் குற்றச்சாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம், அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள், நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக கருதப்படும். உத்தரவை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags

Next Story