கள்ளக்குறிச்சி பள்ளியில் நேரடி வகுப்புகளை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி..
கள்ளக்குறிச்சி பள்ளி முகப்பு. (கோப்புபடம்).
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் சர்வதேச பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக பள்லளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக் கூறியும், அவரது சாவுக்கு நியாயம் வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. பள்ளி முன்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஜூலை 17 ஆம் தேதி பள்ளி வளாகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடியதுடன், தீ வைத்தும் எரித்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.
மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீமதியின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி இருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பள்ளி மூடப்பட்டதால் அங்கு படித்து வந்த மாணவ, மாணவிகள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுவினரும் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆட்சியர் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வகுப்புகளை நடத்த தயார் நிலையில் பள்ளி உள்ளதாகவும், பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில்லை எனவும் தெரிவித்தார். பின்னர் நீதிபதி சுரேஷ்குமார், பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அதன் பின்னர் நிலைமையை பொறுத்து மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு பள்ளிக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் காவல்துறையிடம் மனு அளிக்கலாம் என பள்ளிக்கு உத்தரவிட்டதுடன், அதற்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து பாதுகாப்புக்கு தேவைப்படும் காவலர்கள் எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் கலந்தாலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 21 ஆம் தேதிக்கு நீதிபதி சுரேஷ்குமார் ஒத்திவைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu