கண்ணாடி பாட்டிலா அல்லது டெட்ரா பேக்கா?: அரசு விளக்களிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்தனர்.
இன்று அந்த மனு மீதான விசாரணையின்போது நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் கூறுகையில், பெரும்பாலான உணவுப்பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உடலுக்கு தீங்கு என்பதை அறிந்தும் நாம் அதை வாங்கி உண்கிறோம். இது கவலையளிக்கக் கூடியது. பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை செய்யப்படுவதை ஏன் தடுக்கக்கூடாது? அமுல், நெஸ்ட்லே போன்ற நிறுவனங்கள் டெட்ரா பேக்கில் பொருட்களை விற்பனை செய்வது போல ஆவின் நிறுவனமும் கண்ணாடி பாட்டிலில் அல்லது டெட்ரா பேக்கில் ஏன் விற்பனை செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்
அதற்கு, உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றால் அதனை தடை செய்ய தயார் என்றும், இதுகுறித்த அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் கொடுக்குமாறு தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் அடைத்து விற்பனை செய்ய முடியுமா என்று தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu