நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய கருத்துகள் நீக்கம்
நடிகர் விஜய் 2012-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்திருந்தார். பொதுவாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு நுழைவு வரி வசூலிக்கப்படுவது இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருவதால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டுமென்று விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நுழைவு வரியினை ரத்து செய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் முறையாக வரி செலுத்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக இருக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த கருத்து தொடர்ந்து நடிகர் விஜய், தனி நீதிபதியின் எதிர்மறையான கருத்துகளை நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். முன்னதாக விஜய்யின் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கம்செய்யக் கோரி ஏன் சம்பந்தப்பட்ட நீதிபதியிடமே கோரிக்கை வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி தேதி அறிவிக்காமல் வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் விஜய் மீது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறிய எதிர்மறை கருத்துகள் நீக்கப்படுவதாக வழக்கில் தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu