நான்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு
பட்டமளிப்பு விழா - மாதிரி படம்
திருச்சி, கோவை, நெல்லை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டம் பெறமுடியாத சூழல் நிலவுகிறது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை என புகார் எழுந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடைசியாக 2021 டிசம்பர் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற்று இருந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற முடியாத நிலையில், பட்டமளிப்பு விழா நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.
இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், பல்கலை. பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என ஆளுநர் விரும்புகிறார்; இதன் காரணமாகவே தாமதம் ஏற்படுகிறது. கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் காத்திருக்கின்றனர். இதற்கு காரணம் தமிழக அரசு கிடையாது.
ஆளுநர் எந்த தேதி கேட்டாலும், அதை நாங்கள் கொடுக்கிறோம். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு ஆளுநர் முன்வர வேண்டும். அதற்கு உயர்கல்வித்துறை உறுதுணையாக இருக்கும் என்று கூறியிருந்தார்
இந்த நிலையில், 4 பல்கலைகழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்த தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- சென்னை பல்கலைகழகத்தில் ஜூன் 16-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
- சேலம் பெரியார் பல்கலை.க்கு ஜூன் 28-ந் தேத் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
- திருவள்ளுவர் பல்கலை.க்கு ஜூன் 19-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
- நாகையில் உள்ள ஜெயலலிதா மீன்வள பல்கலை.க்கு ஜூலை 7-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu