மே 17-ம் தேதி ஆளுனர் மாளிகை முற்றுகை போராட்டம்: மக்கள் அதிகாரம் அறிவிப்பு
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராஜூ திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சட்டத்தில் தனக்கு உள்ள பொறுப்பின் வரம்பை மதிக்காமல் அத்து மீறி செயல்பட்டு வருகிறார். கவர்னர் மாளிகையை சனாதன தர்ம அறக்கட்டளை நிகழ்விற்கு பயன்படுத்தி அயோத்தி வழக்கில் வாதாடிய வக்கீலுக்கு விருது கொடுத்துள்ளார். மாநில வளர்ச்சி தேவையில்லை என மாநில உரிமைக்கு எதிராக பேசுகிறார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு மிக அபாயகரமானது என்று பொதுவெளியில் பேசி வெறுப்பை வளர்க்கிறார். தமிழக ஆளுநர் பதவியை வைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் மதவாத வெறி பரப்புகிறார். இதை அனுமதிக்க முடியாது.
இந்தியாவிலேயே பகுத்தறிவாளர்களும் கடவுள் மறுப்பாளர்களும் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்பது உலகறிந்த உண்மை. அதற்கு மாறாக தொடர்பே இல்லாமல் மீன்வள கருத்தரங்கில் தமிழகம் இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரம் என பேசி இருக்கிறார். இதற்கு முன் ராமராஜ்யம் அமைக்க வேண்டும் என பேசினார். தமிழகத்தில் திராவிட, கம்யூனிச இயக்கங்களின் கடும் எதிர்ப்பால் பல பத்தாண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்ட மதத்தலைவர்கள் பல்லக்கு ஊர்வலத்தை மீண்டும் நடத்தத் தூண்டிவிட்டு அதனை ஆதரிக்கும் சாக்கில் பாஜக தலைவர் அண்ணாமலை, மன்னார்குடி ஜீயர், மதுரை ஆதீனம் போன்றோரை வன்முறையைத்தூண்டும் விதமாகப் பேசவிட்டு சட்டம்-ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்துகிறார். தமிழக அரசுக்குத் தெரியாமல் தன்னிச்சையாக துணை வேந்தர்கள் மாநாட்டை கூட்டியதுடன் அதற்கு எந்த தொடர்பும் அற்ற ஆர்எஸ்எஸ் புரோக்கர் ஸ்ரீதர் வேம்பு என்பவரைச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளச் செய்தார்.
ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு கட்டுப்பட்டவர், தன்னிச்சையாக எதையும் செய்ய அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திய பின்னரும் அதனைச் சற்றும் மதிக்காமல் செயல்படுகிறார். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஒரு பொது ஊழியர் (பப்ளிக் சர்வன்ட்) தான் ஆளுநர். அரசியல் சட்டப்படி நடப்பேன் என உறுதிமொழி எடுத்துவிட்டு மதவாத வெறுப்பரசியலை பேசவும் மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படவும் எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை
ஜனநாயகத்தில் மக்களுக்கு மேலான அதிகாரம் எவருக்குமில்லை. ஆளுநரின் செயல் பாடுகள் போட்டி அரசாங்கத்தை நடத்துவதாகவே உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் முடக்கி வைத்திருப்பது அரசியல் சட்டத்திற்கே முட்டுகட்டை போடுவது போன்றது. இது தமிழக அரசின் பிரச்சினை மட்டுமல்ல தமிழக மக்களின் அரசியல் ஜனநாயக, இறையான்மைக்கான ஆபத்து. எனவே ஆளுநர் ரவியை உடனே ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு பாசிச ஒற்றை ஆட்சி அதிகாரத்தை நோக்கி செல்லும் ஆபத்தான நிலையில் ஆளுநர் பதவி முழுமையாக அகற்றுவதற்கு மக்கள் போராட வேண்டும்.
எனவே வரும் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் அதிகாரம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
அதுபோல் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் அவரை சுமந்து சென்று வீதி உலா செல்லும் பட்டணப்பிரவேச நிகழ்விற்கு மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். உடனே மதுரை ஆதீனம் "உயிரைக் கொடுத்தாவது பட்டணப்பிரவேச நிகழ்ச்சியை நடத்திய தீருவோம்! ஆங்கிலேயர்களே ஆதரவு தெரிவித்த இந்த நிகழ்வுக்கு அரசியல் காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்" என்று கூறியிருந்தார். பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்தால் ஒரு அமைச்சரும் தெருவில் நடமாட முடியாது என்று மன்னார்குடி ஜீயர் எதிர்ப்பை தெரிவித்தார். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை " ஆதீனத்தை அமர வைத்து பல்லக்கை நானே தோளில் சுமப்பேன் என்றார். எச்.ராஜா நான் அங்கு நிற்பேன் என சொல்கிறார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இம்மிரட்டலுக்குப் பணிந்து தமிழக அரசு பல்லக்கு தூக்குவதற்கு விதித்த தடையை நீக்கியுள்ளது. பல்லக்கு விவகாரத்தில் மனிதனை மனிதன் சுமப்பது மத விவகாரம் அல்ல. அது மனித உரிமை மீறல், அரசியல் சட்டம் வழங்கியுள்ள மனித கண்னியத்திற்கு எதிரானது.சட்டப்படி குற்றம். எனவே மே 22 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் மயிலாடுதுறையில் நடக்கும். போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu