தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் ஆய்வு
சென்னை ஆளுநர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என். ரவி ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பெய்த மழை பாதிப்பால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மீட்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசுத் துறைகள் மற்றும் பாதுகாப்பு படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய அரசுத்துறைகள், அவற்றின் உதவிகளை மாநில அரசு அழைத்தவுடன் பணியாற்றும் வகையில் தயாராக வைத்து உள்ளன. மேலும் மாநில அரசால் கோரப்படும்போது மீட்பு குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவின்படியும் தேவைக்கேற்ப இயன்ற வகையில் சொந்தமாகவும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மத்திய அரசு துறைகள் ஈடுபடுகின்றன.
மேலும், இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம், இந்திய விமான போக்குவரத்துத் துறை ஆணையம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்பட்டபோதும் மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் வரவில்லை.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை வளங்கள் சரியாக தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும் என்பது தெளிவற்று உள்ளதாக மத்திய அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூடுதல் மீட்பு குழுவினரை கையிருப்பில் வைத்திருக்குமாறு மத்திய அரசுத்துறையினரை ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu