8 மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க மன்றாடும் தமிழக அரசு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ் நாளிதழ் செய்தியில் 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தும் திட்டம் ஆகிய திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி-ஆற்காடு - திண்டிவனம் பணிகள் முடக்கம் என்ற செய்திக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் 500 கி.மீ. நீளம் உள்ள, 8 மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த மத்திய அமைச்சகத்திற்கு தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது, ஆனால், இச்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்கும் முறைப்படியான அறிக்கை (Gazette Notification) இந்திய அரசிதழில் வெளியிடப்படாமல் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதன்மை செயலர், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அவர்கள், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு மேற்கண்ட 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க கோரி 23.6.2021 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
இச்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, மத்தியசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரிக்கு, 24.6.2021 அன்று கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து மீண்டும் 11.10.2021 அன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அத்துடன் அமைச்சர் எ.வ.வேலு புதுடெல்லியில் 12.10.2021 அன்று நிதின்கட்கரியை நேரில் சந்தித்து, இக்கோரிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் 8 மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் 18.11.2021 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது 24.01.2022 அன்று, முதன்மை செயலர், நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளரும், மத்திய அமைச்சரை புதுடெல்லியில் நேரில் சந்தித்து இந்த 8 மாநில சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக விரைவில் அறிவிக்க கோரி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு கலந்தாய்வு கூட்டத்தின் போதும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மேற்கண்ட 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக விரைந்து அறிவிக்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. முன்னுரிமை அடிப்படையில் இந்த மாநில சாலைகளை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் அறிவிப்பு மத்திய அமைச்சகத்திடம் இருந்து தமிழக அரசு எதிர்பார்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu