அப்பாடா.. இனி அலைய வேண்டாம்: ஸ்மார்ட் ரேஷன்கார்டு வீடு தேடி வரும்..!
![அப்பாடா.. இனி அலைய வேண்டாம்: ஸ்மார்ட் ரேஷன்கார்டு வீடு தேடி வரும்..! அப்பாடா.. இனி அலைய வேண்டாம்: ஸ்மார்ட் ரேஷன்கார்டு வீடு தேடி வரும்..!](https://www.nativenews.in/h-upload/2022/06/24/1552790-smart-ration-card.gif)
தமிழக அரசு வட்ட வழங்கல் அலுவலகம் மூலம் வழங்கும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு (கோப்பு படம்).
தமிழகத்தில் புதிதாக மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் ரேஷன்கார்டு) பெறவோ அல்லது ஏற்கனவே உள்ள மின்னணு குடும்ப அட்டை தொலைந்தாலோ இணைய வழியில் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அந்த தகவலை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் (டி.எஸ்.ஓ) அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலரிடம் நேரில் தெரிவிக்க வேண்டும். அடுத்து 20 அல்லது 30 தினங்களில் மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தவுடன் மீண்டும் வட்ட வழங்கல் அலுவலகம் சென்று ஸ்மார்ட் ரேஷன்கார்டு பெற்றுக் கொள்ளலாம். இது தற்போது உள்ள நடைமுறை.
ஆனால், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் நகல் மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் விருப்பத்தின் பேரில் தபால் வழியாக இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கும் வகையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அஞ்சல் கட்டணத்தை பயனாளிகளிடம் வசூல் செய்து குடும்ப அட்டைதாரர்கள் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையை அஞ்சல் வழியாக பெற விருப்பம் தெரிவிக்கும் வசதி இணையதளத்தில் செய்யப்படும் என்றும் புதிய குடும்ப அட்டையுடன் அதனை செயலாக்கம் செய்யும் முறை குறித்த விளக்க குறிப்பும் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தபாலில் பெறுவதற்கான கட்டணம் ரூ.25-ஐ இணையவழியில் செலுத்துமாறு, விண்ணப்பதாரருக்கு குறுந்தகவல் மூலமாக தெரிவிக்கப்படும். குடும்ப அட்டை நகலை தபாலில் பெற விரும்புவோருக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் போதே, இணையவழி அட்டை கட்டணம் ரூ.20 மற்றும் தபால் கட்டணம் ரூ.25 என மொத்தம் ரூ.45 கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
தபால் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த சட்டப் பேரவையில் அமைச்சா் சக்கரபாணி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தமிழக அரசின் இந்த புதிய அரசாணையின் மூலம், அப்பாடா... வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு இனி அலைய வேண்டியதில்லை..! என, ரேஷன்கார்டு தாரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu