அரசுப் பேருந்து பயணத்தில் குறையா? புகார் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிப்பு
அரசுப் பேருந்து பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு தொடர்பு எண்ணை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்தார்.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வோர் தங்களுக்கு தெரிந்த குறைகள், மற்றும் புகார்களை தெரிவிக்கும் வகையில், தமிழக அரசு இணையதளம் மற்றும் தொடர்பு எண்ணை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பொது மக்கள் மற்றும் பயணிகளின்
வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி எண் (1800 599 1500) மற்றும் பொது இணையதளம் "(அரசு பஸ்)" திட்டங்களை துவக்கி வைத்தார்.
பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி எண்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில், பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய பல முயற்சிகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைக் கண்டறியவும், அவர்களின் குறைகள் மற்றும் புகார்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவும், ஒருங்கிணைந்த பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி மையம் அமைக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
அதன் அடிப்படையில், உதவி மையத்தைத் தொடர்பு கொள்வதற்கான இலவச எண் 1800 599 1500 அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு அழைப்புக் கட்டணம் எதுவும் இல்லை. பயணம் செய்யும் பயணிகள். பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார்கள், குறைகள் மற்றும் தகவல்களையும் பெறலாம்.
பயணிகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து அழைப்புகளைப் பெறுவதற்கான வசதி பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தலைமையகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. பெறப்பட்ட புகார்கள் மற்றும் குறைகள் பிரத்யேக அடையாள எண் ஒதுக்கப்பட்டு. பதிவு செய்யப்பட்டு. பின்னர் ஒப்புகை குறுந்தகவல் பயணிகளுக்கு அனுப்பப்படும்.
பெறப்பட்ட புகார்கள் மற்றும் குறைகளை அந்தந்த போக்குவரத்து கழகங்கள் உடனுக்குடன் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் பொதுமக்கள், பேருந்துகளின் தூய்மை, தாமதமாக இயக்குதல், பேருந்து பழுதடைதல், பேருந்து நிலையங்களில் உரிய பேருந்துகள் இல்லை, பேருந்து நிலையங்களில் அதிக நேரம் காத்திருப்பது, பேருந்து நிறுத்தங்களில் அதிக நேரம் காத்திருப்பது, ஓட்டுநர்கள் பேருந்து நிறுத்தங்களைத் தவிர்ப்பது, பயணிகளின் பொருட்கள் தொலைந்து போவது, பேருந்துகளில் பணியாளர்கள் தவறான நடத்தை, சக பயணிகளால் துன்புறுத்தல், பேருந்துகளை மோசமாகப் பராமரித்தல், விபத்துகள், வெள்ளம், கலவரங்கள் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். பேருந்து இயக்கம் தொடர்பான விசாரணை, பண்டிகைக் கால சிறப்பு பேருந்து இயக்கம் போன்ற தகவல்களையும் பெறலாம்.
விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்த எச்சரிக்கை செய்திகளை பணியாளர்கள் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் புகார் மற்றும் குறைகளை தங்கள் தொலைபேசியிலிருந்து " கூகுள் குரல் உதவி " வழியாக மேற்கண்ட இலவச எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பெறப்படும் புகார்கள் மற்றும் குறைகளை அந்தந்த போக்குவரத்து கழகங்கள் கண்காணிக்கலாம். புகார்கள் மற்றும் குறைகள் தீர்க்கப்பட்ட பிறகு, புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பயணிகளுக்கு மீண்டும் குறுந்தகவல் தெரிவிக்கப்படும். இத்திட்டத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்க தேவையான நபர்கள் புகார் மையத்திலும் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களிலும் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தினசரி, வாராந்திர, மாத அடிப்படையிலான மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு போக்குவரத்து கழக வாரியான புகார் மற்றும் குறைகள் குறித்த விவரங்கள் பற்றிய அறிக்கைகள் வழியாக போக்குவரத்துக் கழகங்களின் மேலாளர்கள், பயணிகளின் புகார்கள்/குறைகள் மீது கவனம் செலுத்தி, பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பேருந்து சேவையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதனால் பேருந்து இயக்கத்தில் பயணிகளின் திருப்தியை மேலும் அதிகரிக்க முடியும்.
பொது இணையதளம்:
" (அரசு பஸ்) " தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பயணம் செய்யும் சுமார் 1.70 கோடி பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய எடுத்து வரும் சீரிய நடவடிக்கையின் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கான பொது இணையதள வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த இணையதளம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளும் வகையில், சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் நேரம், மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் குறித்த தகவல்கள், அரசு போக்குவரத்து கழகங்களின்
மேலாண்மை விவரங்கள், இயக்குநர்கள் குழு, போக்குவரத்து கழகங்களின் அமைப்பு, அவற்றின் பயணிகள் சார்ந்த சேவைகள், இயக்க வரம்பு, GST எண்கள், புகைப்படத் தொகுப்பு மற்றும் தொடர்பு எண்கள் ஆகிய விவரங்களை பொதுமக்கள் அறிந்துக் கொள்ளலாம்.
பயணிகள் தங்கள் குறைகள். புகார்கள் பயணம் தொடர்பாக தகவல்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் வசதி இந்த இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து வருகை மற்றும் இயக்க நேரம் குறித்த விவரங்கள், வழித்தட தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ள உரிய வசதி செய்யப்பட்டுள்ளது.
"சென்னை பேருந்து செயலியை" பதிவிறக்கம் செய்வதன் மூலம் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து வருகை, பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடம் மற்றும் எதிர்பார்க்கப்படும் வருகை நேரம் குறித்த விவரங்கள் பயணிகள் அறிந்து கொள்ள உரிய வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இணைப்பு வசதி மூலம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உடனடி தளவழிப் பதிவு திட்டத்தின் (OTRS) வழியாக முன்பதிவு செய்வதற்கும். திருவிழாக்கால சிறப்பு பேருந்து இயக்கம் குறித்த தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இந்த இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இணைப்பு வசதி மூலம் தமிழ்நாடு அரசு, சாலைப் போக்குவரத்து நிறுவனம் (IRT), தமிழ்நாடு அரசு போக்குவரத்து மேம்பாட்டு நிதிக் கழகம் (TDFC), சென்னை மெட்ரோ ரயில் கழகம் (CMRL) போன்றவற்றின் இணையதளத்தைப் பார்க்கவும் உரிய வசதி செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகங்களில் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படும் போது அதன் வழித்தட விபரங்கள், புறப்படும் மற்றும் சேருமிடம், நேர அட்டவணை, கட்டண விபரம் குறித்த தகவல்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த இணையதளத்தில் உரிய தேடும் வசதிகள் உருவாக்கப்படும்.
இந்த இணையதளத்தை பொதுமக்கள் தேவையான தகவல்களை தேடவும் உரிய வசதிகளுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தினை URL (www.arasubus.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் பொதுமக்கள் பார்த்து பயன் அடையலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu