கோகுல்ராஜ் கொலை வழக்கு: 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி
கோகுல் ராஜ் மற்றும் யுவராஜ்
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், கோகுல்ராஜ் இறப்பு விவகாரம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அவர்கள் விசாரணைக்கு பின்பு, இது தொடர்பாக சங்ககிரியை சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடக்கத்தில் நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த கொலை வழக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு 2 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜோதிமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவர் மீதான வழக்கு மட்டும் நாமக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண், குமார் என்ற சிவகுமார் (43), சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (29), ரஞ்சித் (29), செல்வராஜ் (39) ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
மேலும் அவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சம்பத்குமார் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் ஓரிரு நாட்கள் கழித்து முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட யுவராஜ் மட்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர், இந்த வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நேரில் வரவழைத்து விசாரித்தனர். அப்போது அவர் கோகுல்ராஜ் கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கோகுல்ராஜ் தன்னுடைய வகுப்பு தோழர் மட்டும்தான். வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும், வாக்குமூலம் அளித்தார்.
அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததாக கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குபதிவு செய்ய மதுரை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று சுவாதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனது.
இதற்கிடையே தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அதன் மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் கூறுகையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
மேலும் 5 பேர் விடுதலையில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் அதிரடி தீர்ப்பளித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu