ஆளுநருக்கு அறிவுரை வழங்குங்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசுகையில், ஆளுநர் பற்றி இரண்டாவது முறையாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய விரும்பத்தகாத ஒரு சூழலை, இந்த அரசு உருவாக்கவில்லை. ஆனால், ஆளுநர் அரசியல் சட்டத்தையும் கடந்து, ஓர் அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுவதால் இப்படியொரு தீர்மானத்தை இரண்டாவது முறையாக நான் முன்மொழிய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
அரசியல் சட்டத்தின் தந்தை என நம் அனைவராலும் போற்றப்படும் டாக்டர் அம்பேத்கர், “ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாத அரசியல் சட்ட ஆளுநராகச் செயல்பட வேண்டும்” என்பதை அரசியல் நிர்ணய சபையிலேயே வலியுறுத்தி இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அந்த அரசு உள்ள மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் ஆளுநர் இருக்க வேண்டும்” என்று எத்தனையோ உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால் நமது ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் “நண்பராக” இருப்பதற்குத் தயாராக இல்லை என்பதை அவர் பதவியேற்றதில் இருந்து செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தி வருகிறது. ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல.
இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, இந்தச் சட்டமன்றத்தின் இறையாண்மையை, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களைக் கொச்சைப்படுத்தி பொதுவெளியில் பேசுகிறார். அவர் ஆளுநர் என்ற நிலையைத் தாண்டி அரசியல்வாதியாகப் பேசுகிறார். அந்தப் பதவிக்கு என்னென்ன தகுதிகளைச் சர்க்காரியா அறிக்கை வரையறுத்துக் கூறியுள்ளதோ, அந்தத் தகுதிகளை எல்லாம் மறந்துவிட்டுப் பேசுகிறார்.
பிரதமர் தமிழ்நாட்டிற்கு வரும்போதோ அல்லது பிரதமரைச் சந்திக்க நான் டெல்லி செல்லும்போதோ தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவதை ஆளுநர் வழக்கமாகக் கொண்டு இருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யும் மசோதாவை இந்த அவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், இளைஞர்கள் தற்கொலைகள் தொடரும் நிலையில் கூட அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.
அரசியல் சட்டம் ஆளுநருக்குத் தெரியவில்லை என்று நான் கூறமாட்டேன். ஆனால் அவருக்கு இருக்க வேண்டிய “அரசியல் சட்ட விசுவாசத்தை”, “அரசியல் விசுவாசம்” அப்படியே விழுங்கி விட்டது என்றே இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
அதனால்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் மீறி அரசின் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவுகளை விமர்சித்துப் பொதுவெளியில் பேசுகிறார். அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள “மதச்சார்பின்மைக்கு” எதிராகப் பேசுகிறார்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துகிறார். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்குக் குறுக்கே நிற்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தை, இறையாண்மை மிக்க இந்த நூற்றாண்டு வரலாறு கொண்ட சட்டமன்றத்தை அவமதிக்கிறார். நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில் ராஜ்பவனை “அரசியல் பவனாக” மாற்றிக் கொண்டிருக்கிறார். வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்.
ஆளுநரை விமர்சிக்கிறோம் என்றால் அவரை தனிப்பட்ட முறையில் அல்ல, ஆளுநரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம். ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதிலுக்குப் பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக நான் மாற்ற விரும்பவில்லை. அதேநேரத்தில், சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால் அதனைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அரசியல் நோக்கத்துக்காக, அரசியல் லாப நஷ்டங்களுக்காக, யாரோ சிலரின் விருப்பங்களுக்காக நாம் இந்த அவையில் சட்டங்களை நிறைவேற்றுவது இல்லை. எடுத்தவுடன் சட்டம் போடுவதும் இல்லை. நீட் விலக்குச் சட்டமாக இருந்தாலும், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டமாக இருந்தாலும், எத்தனைக்கட்ட பரிசீலனைக்குப் பிறகு இவற்றை நிறைவேற்றினோம் என்பதை இந்த அவைக்கு விளக்கத் தேவையில்லை.
“தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு தமது மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய அரசமைப்புச் சட்டத்தின்படியான பொறுப்பும் ஜனநாயகரீதியான கடமையும் உள்ளது.
அவற்றைக் கருத்தில் கொண்டு, சட்டமன்றப் பேரவைக்கு உள்ள இறையாண்மை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான சட்டமியற்றும் பொறுப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள பல்வேறு மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளிக்காமல் காலவரையின்றி கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை இந்தப் பேரவை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறது.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்கைக்குரிய கருத்துகள், அவர் வகிக்கும் பதவி, எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணம் ஆகியவற்றுக்கும் மாநிலத்தின் நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதோடு, அரசமைப்புச் சட்டத்திற்கும் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிராகவும் இந்தப் பேரவையின் மாண்பைக் குறைத்து நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் மேலாண்மையை சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்துகிறேன்.
மேலும், மக்களாட்சி தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இந்தச் சட்டமன்றத்தின் இறையாண்மை ஆகியவற்றிற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், இந்தப் பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டும் என்று ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu