தடுப்பூசி போட்டால் வீட்டுமனை, தங்கம், வெள்ளி: பவானி நகராட்சி அதிரடி

தடுப்பூசி போட்டால் வீட்டுமனை, தங்கம், வெள்ளி: பவானி நகராட்சி அதிரடி
X

பவானி நகராட்சி சார்பில் பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  முகாம் ஒன்றில் நீண்ட வரிசையில் தடுப்பூசி போட காத்திருந்த மக்கள். 

தடுப்பூசி போட பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில், குலுக்கல் முறையில் 2 சென்ட் வீடு மனை பட்டா, தங்கம், வெள்ளி பரிசுகள் தரப்படும் என்று, பவானி நகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று, 538 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவானி ஒன்றியத்தில் 39 மையங்கள், அம்மாபேட்டை வட்டாரத்தில் 63 மையங்கள் என 102 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஏராளமான பரிசுகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.

அவ்வகையில், முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு 4 பேருக்கும், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் 4 பேருக்கும், மூன்றாம் பரிசாக ரூ. 500 மதிப்புள்ள புடவைகள், ரூ. 500 மதிப்புள்ள வேஷ்டிகள் தலா 10 பேருக்கு வழங்கப்படும். ஆறுதல் பரிசாக 4 பேருக்கு ரூ.400 மதிப்புள்ள ரீ-சார்ஜ் கூப்பன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சிறப்பு பரிசாக தடுப்பூசி செலுத்து கொள்ளும் 10 ஏழை, எளிய மக்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தலா இரண்டு சென்ட் வீடு மனை பட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி முகாம்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதுகுறித்து பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் கூறுகையில், பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த வாரம் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இன்று நடைபெறும் தடுப்பூசி முகாமிலும் பொது மக்களுக்கு ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் அம்மாபேட்டை ஒன்றியம் மற்றும் பவானி ஒன்றியத்தில் ஆண்டி குளம், ஒரிச்சேரி, சின்னப்புலியூர், ஓடத்துறை ஊராட்சி பொதுமக்கள் இந்த குலுக்கல் பரிசு திட்டத்தில் பங்கேற்க முடியாது என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!