வாட்ஸ் அப் பயன்படுத்துவோரிடம் கோடிக்கணக்கில் சுருட்டிய மோசடி கும்பல்
கோப்புப்படம்
நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர்களில் 40 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாட்ஸ் அப் செயலி வழியாக பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் செல்போன் திரையை அனுப்பி வைக்கும் புதிய வசதி வாட்ஸ் அப்பில் உள்ளது. இதனை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் கோடிக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பேசி வாட்ஸ் அப் பயனாளர்களை மயக்கும் இந்த கும்பல் குறுகிய காலத்தில் நீங்கள் பணக்காரர்கள் ஆகிவிடலாம், நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.
இந்த நிலையில் மோசடி கும்பல் வாட்ஸ் அப் திரைகளையும் விட்டு வைக்கவில்லை. பொதுமக்களிடம் இருந்து வாட்ஸ் அப் திரைகளை அனுப்ப சொல்லி, அதில் உள்ள ரகசிய தகவல்களை மோசடி கும்பல் திருடிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாட்ஸ் அப்பில் பேசி அரசு அதிகாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு உயர் பதவிகளில் இருப்பவர்கள் போல் பேசி இந்த மோசடி ஆசாமிகள் பணத்தை வாரி சுருட்டி உள்ளனர்.
வியட்நாம், கென்யா, எத்தியோப்பியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து மோசடி ஆசாமிகள் நாடு முழுவதும் 10 ஆயிரம் கோடி அளவுக்கு பணத்தை சுருட்டி இருக்கிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் ரூ. 10 ஆயிரத்து 319 கோடி அளவுக்கு வாட்ஸ் அப் பயன்படுவோரிடம் இருந்து வெளிநாட்டு மோசடி கும்பல் பணத்தை சுருட்டி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாட்டு மையம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எனவே வாட்ஸ் அப்பயன்படுத்துவோர்கள் எந்த எந்த விஷயங்களை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்கள்.
வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும். அதன் பிறகு 84, 63, 24 என்பது போன்ற எண்களில் இருந்து மோசடி அழைப்புகள் வருகின்றன. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் பொது மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீண்ட நேரம் வாட்ஸ்- அப்பை பயன்படுத்துவோர்களை குறி வைத்து இந்த மோசடி அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu