பாலியல் புகாருக்குள்ளான கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் டிஸ்மிஸ்

பாலியல் புகாருக்குள்ளான கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் டிஸ்மிஸ்
X

டிஸ்மிஸ் செய்யப்பட்ட பேராசிரியர்கள் 

பேராசிரியர்கள் 4 பேரை டிஸ்மிஸ் செய்ததை எழுத்துப்பூர்வமாக அளித்தால் மட்டுமே கல்லூரிக்கு திரும்புவோம் என மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பேராசிரியர் ஹரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு முதுநிலை படிப்பின் போது பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் ரீதியாகவும், தவறான நோக்கத்தில் தொடர்ச்சியாக நடந்து கொண்டதாகவும், தொந்தரவு காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். கலை நிகழ்ச்சிக்காக ஹைதரபாத் சென்றிருந்த பேராசிரியர் ஹரிபத்மனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனதால் டவரை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாணவியுடன் படித்த மூன்று சக தோழியிடம் தனிப்படை காவல்துறையினர் கேரளாவிற்கு சென்று விசாரணை நடத்தி விவரங்களை பெற்றனர்.

ஹைதரபாத்தில் கலை நிகழ்ச்சிக்கு சென்ற ஹரிபத்மன் நேற்றிரவு சென்னை திரும்பியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இன்று அதிகாலை மாதவரத்தில் உள்ள அவரது நண்பர் வீட்டில் வைத்து பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்தனர். மகளிர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் உள்ளிட்ட 4 பேரை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. பேராசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதை வாய்மொழி மூலமாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், பேராசிரியர்கள் டிஸ்மிஸ் செய்ததை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும் என மாணவிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். எழுத்துப்பூர்வமாக அறிவிக்கும் வரை தேர்வெழுதப் போவதில்லை என்றும் கல்லூரி நிர்வாகத்திடம் நடந்த பேச்சுவார்த்தையில் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் புகாருக்குள்ளான பிற 3 பேரை டிஸ்மிஸ் செய்வதற்கான ஆணை 2 நாட்களில் எழுத்துப்பூர்வமாக தரப்படும் என்று கலாஷேத்ரா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!