முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை: முதல்வர் அறிவிப்பு
சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் இன்று விதி 110-இன் கீழ் பேசியதாவது:
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்; மத்திய வர்த்தக அமைச்சர்; வெளியுறவுத் துறை அமைச்சர்; நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்த வி.பி. சிங், தேசிய முன்னணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார். வி.பி.சிங் பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள்தான் என்றாலும், அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. அதனால்தான் அவரை இந்த மன்றத்தில் இப்போதும் போற்றிக் கொண்டு இருக்கிறோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு மத்திய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் மண்டல் தலைமையிலான ஆணையம்.
சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு மண்டல் பரிந்துரையின் மத்திய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங்.
தமிழ்நாட்டைத் தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் நினைத்தார். தந்தை பெரியாரைத் தனது உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக் கொண்டார். இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்லி வந்த மத்திய அரசை 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புக்கொள்ள வைத்தது தி.மு.க. உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்கள்தான்.
அதனை மனதில் வைத்துத்தான் அகில இந்திய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். அதற்கான முதல் கூட்டமானது காணொலி மூலமாக நடந்திருக்கிறது. அகில இந்திய அளவில் பெரும்பாலான கட்சிகள் அதில் பங்கெடுத்தன. அகில இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் வழிகாட்ட வேண்டும் என்று அக்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறோம். அனைத்து வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய கொள்கை உரத்தை வழங்கியவர்களில் ஒருவர் வி.பி.சிங் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்தவர் வி.பி.சிங். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண தனது இல்லத்தில் அகில இந்தியத் தலைவர்கள் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி 'இப்போது கலைஞர் சொல்லப் போவதுதான் என் கருத்து' என்று சொன்னவர் வி.பி.சிங்.
சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில், கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய ஒப்பற்ற தலைவரான வி.பி.சிங்கின் நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்குத் தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்பதை மிகுந்த பெருமிதத்தோடு இந்த மாமன்றத்தில் அறிவிக்க விரும்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu