வருமான வரித்துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஓ. பன்னீர்செல்வம்!
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
தொழிலதிபரான சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
அந்த ஆவணங்களின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. 2015 - 16 ஆம் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 - 18 ஆம் ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நோட்டீஸின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக் கோரியும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து வருமான வரித்துறையில் மேல்முறையீடு செய்து உள்ளதால் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu