முதல் முறையாக தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மே தின வாழ்த்து

முதல் முறையாக தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மே தின வாழ்த்து
X

நடிகர் விஜய் பதிவிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தி.

முதல் முறையாக தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மே தின வாழ்த்து செய்தி பதிவிட்டு உள்ளார்.

‛உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி'' எனக்கூறி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் மே மாதம் 1ம் தேதி உழைப்பாளர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உழைப்பாளர்களை நினைவுக்கூறவும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதும் தான் இந்த நாளின் நோக்கமாகும்.

அதன்படி இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் உழைப்பாளர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் உழைப்பாளர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛ உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு பறை சாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ‛‛மே தின'' நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.

மேலும் அந்த பதிவில் போட்டோ ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அந்த போட்டோவில் உழைப்பாளர்களை குறிக்கும் வகையிலான போட்டோ மற்றும், விஜயின் போட்டோ இடம்பெற்றுள்ளது. அதோடு மே 1ம் தேதி என பெரியதாக உள்ளது. அதோடு, ‛‛உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை மனத்தில் கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம்!'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜயின் இந்த பதிவை தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது பதிவை எக்ஸ் பக்கத்தில் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த பதிவுக்கு கீழே நடிகர் விஜயின் போட்டோக்களை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட உழைப்பாளர் தின வாழ்த்து செய்தியில், ‛‛குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் உழைப்பாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம்! மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!'' என தெரிவித்துள்ளார்.

அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‛‛ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும், ஒருவர் பெற்ற மக்களே!'' உழைப்பில் தான் உடல் உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்! அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!'' என தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தொழிலாளர்கள் அவைருக்கும், தமிழ்நாடு பாஜக சார்பாக உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தொழிலாளர்களின் உன்னதத்தையும், உரிமையையும், தியாகத்தையும் குறிக்கும் இந்த சிறப்பு மிக்க தினத்தில், அனைவரின் கடும் உழைப்புக்கான பலன்கள் நிறைவாகக் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில், நமது நாடு உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை எட்ட வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்ற துணையிருக்கும், ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!