கறிக்கடை வரலாற்றில் முதன் முறை...... இ.எம்.ஐ., மூலம் மட்டன், சிக்கன்
பைல் படம்.
இ.எம்.ஐ. என்று அழைக்கப்படும் சரிசமமாதாந்திர தவணை முறையில், நிலம், வீடு, வாகனம், செல்போன், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை வாங்கி, அதற்கான முழு தொகையை செலுத்த முடியாதவர்கள், கையில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு தொகையை மட்டும் கட்டி விட்டு, பிறகு மீதமிருக்கும் பணத்தை கடனாக இந்த முறை மூலம் மாதம் மாதம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கறிக்கடை வரலாற்றிலேயே முதன்முறையாக, கோவையில் இ.எம்.ஐ மூலமாக மட்டன், சிக்கன் வாங்கும் புதிய முறையை விற்பனையாளர் ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் ரியாஸ் அகமது. இவர் குனியமுத்தூர் பகுதியில் சிக்கன் மற்றும் மட்டன் விற்பனை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இது தொடர்பாக பேசிய அவர் , குனியமுத்தூர் பகுதியில் மட்டன், சிக்கன் கடை வைத்திருக்கிறேன். பல்வேறு கடைகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் இஎம்ஐ விருப்ப தேர்வு கொடுத்து வருகின்றனர். அதாவது பொதுவாக டிவி, பிரிட்ஜ், செல்போன், வாஷிங் மெஷின் போன்ற அனைத்திற்கும் இஎம்ஐ விருப்ப தேர்வு கொடுப்பது வழக்கம். அதனால் மட்டன், சிக்கன் போன்ற இறைச்சிகளுக்காக நாம் ஏன் கொடுக்கக் கூடாது என நினைத்து இதனை கொடுத்திருக்கிறேன்.
தற்போது மட்டன் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் சாதாரண நடுத்தர மக்கள் மட்டன் வாங்க சிரமபடுகின்றனர். இந்த சிரமத்தை போக்க , சாதாரண மக்களும் எளிதில் வாங்கும் வகையில் இ.எம்.ஐ வசதியை அறிமுகப்படுத்தலாம் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. குறிப்பாக திருமண விழாக்கள் உள்ளிட்ட பெரிய விழாக்களில் அதிக அளவில் மட்டன் வாங்கும்போது, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வசதியை பயன்படுத்தும் வகையில் இந்த இ.எம்.ஐ வசதியை அறிமுகப்படுத்துவதற்காகவும், இதுதொடர்பாக தனியார் வங்கியிடம் பேசி, அந்த வங்கியின் உதவியுடன் இஎம்ஐ வசதி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.
குறைந்தது 5 ஆயிரம் ரூபாய்க்கு மட்டன் வாங்கும்போது மூன்று மாதங்கள் முதல், ஒரு வருடம் வரை தவணைகளாக கட்ட முடியும். இதற்கு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி மட்டனை பெற்றுக் கொண்டு கொள்ளலாம். கல்யாண நிகழ்ச்சிக்காக 500 முதல் 700 கிலோ வரை இ.எம்.ஐ மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். 3 மாதத்திற்கு வட்டி தொகை 170 ரூபாய் ஆகும் என கூறிய அவர், தொடர்ந்து எதிர்காலத்தில் இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ரம்ஜான் பண்டிகைக்காக மட்டுமல்லாமல் எல்லா நாட்களிலும் பொதுமக்களின் நலனுக்காகவே இந்த இ.எம்.ஐ வசதியை ஏற்படுத்தியிருக்கிறேன். தற்போது இந்த வசதி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என அவர் கூறினார். கறிக்கடை வரலாற்றில் முதன்முறையாக கோவையில் மட்டனுக்கு இ.எம்.ஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டது அந்த பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதோடு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu