திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு உதவிய விமான ஊழியர் கைது
திருச்சி விமான நிலையம் (பைல் படம்).
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பயணி ஒருவர் இருக்கையின் அடியில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்து இந்த விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமான நிறுவன ஊழியர் யுவராஜ் (வயது 36 )என்பவரிடம் கொடுத்து தங்கத்தை வெளியில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார்.
இந்த நிலையில் இருக்கையின் அடியில் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை யுவராஜ் தனது காலணியின் அடியில் பவுடர் வடிவில் வைத்து வெளியே எடுத்து வர முயற்சி செய்தார். இதனை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கு தெரிந்தவுடன் அவர்கள் யுவராஜை சோதனை செய்த போது அவரது காலணியின் உள்பகுதியில் அணியும் சாக்ஸில் மறைத்து சுமார் 2 கிலோ மதிப்பிலான பவுடர் வடிவிலான தங்கத்தை வெளியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்ததை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.
அவர்கள் யுவராஜை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியரே தங்கத்தை கடத்துவதற்கு உறுதுணையாக இருந்தது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu