நெடுந்தீவு அருகே மேலும் 5 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே மேலும் 5 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
X

கோப்புபடம் 

மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கடல் எல்லைக் கோட்டை (ஐஎம்பிஎல்) தாண்டி தங்கள் கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை நெடுந்தீவு (டெல்ஃப்ட் தீவு) அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

சனிக்கிழமை, நெடுந்தீவு அருகே தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் சிறை பிடித்துள்ளனர்.

கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதால் கடல் எல்லைகள் மற்றும் மீன்பிடி உரிமைகள் தொடர்பான கவலைகள் அடிக்கடி மோதல்களுக்கு வழிவகுக்கும் ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாகும். கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கமும், கைதானவர்களின் குடும்பத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியதன் அடிப்படையில் சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்களை மொட்டை அடித்து விடுதலை செய்தது இலங்கை அரசு.

மீனவர்கள் மொட்டை அடித்து விடுதலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் மீனவ சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.இதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் சார்பில் போராட்டமும் நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!