முதலில் கட்சி.. இப்ப ஆட்சி.. எல்லை மீறும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், ஐ. பெரியசாமி.
மதுரை மாவட்ட தி.மு.க.வில் எப்போதுமே கோஷ்டி பூசலுக்கு பஞ்சமே கிடையாது. இந்த கோஷ்டி மோதல் சில நேரங்களில் வாக்குவாதத்தில் தொடங்கி ,கைகலப்புக்கு மாறி இறுதியாக கொலையில் முடிந்த சம்பவங்களும் உண்டு. கருணாநிதி காலத்தில் தொடங்கிய இந்த கோஷ்டி மோதல்கள் இப்பொழுது ஸ்டாலின் காலம் வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மதுரை தி.மு.க.வில் ஆரம்பத்தில் பொன் முத்துராமலிங்கம், காவேரி மணியம் ,ஐ பெரியசாமி என முன்னணி தலைவர்களுக்கு இடையே பிரச்சனை இருந்தது. மாவட்ட பிரிவினைகளுக்கு பின்னர் இது கொஞ்சம் அமைதியாக இருந்தது. இப்பொழுது மீண்டும் கோஷ்டி மோதல் வெடித்து வருகிறது.
மதுரையில் 2 அமைச்சர்கள்
மதுரை மாவட்டத்தில் தற்போது தி.மு.க.வைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாக உள்ளனர். ஒருவர் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி. இன்னொருவர் தமிழக நிதித்துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன். பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மறைந்த தி.மு.க. முன்னணி தலைவர்களில் ஒருவரான பி .டி .ஆர். பழனிவேல் ராஜனின் மகன் ஆவார். வெளிநாடுகளில் உயர்கல்வி படித்து விட்டு அமெரிக்காவில் உள்ள முன்னணி வங்கிகளில் பணியாற்றி விட்டு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் மறைவுக்கு பின்னர் தி.மு.க.கட்சி பணிக்கு வந்தார் பழனிவேல் தியாகராஜன். முதலில் அவருக்கு தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் அந்த பதவி அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டது.
பிரியாணி விருந்து
பழனிவேல் தியாகராஜனுக்கும் சக அமைச்சரான மூர்த்திக்கும் இடையே அடிக்கடி உரசல் ஏற்படுவது உண்டு. அதேபோல் அங்கு மாவட்ட செயலாளராக இருக்கும் தளபதி மற்றும் மணிமாறன் ஆகியோருக்கும் பி. டி .ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு நல்ல சூழல் கிடையாது. அடிக்கடி இவர்கள் எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுவது உண்டு. இந்த நிலையில் அமைச்சர் மூர்த்தி தனது மகனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திருமண விழாவை நடத்தி பிரம்மாண்ட பந்தலில் பல்லாயிரம் பேருக்கு உணவு வழங்கிய நிலையில் அதற்கு போட்டியாக கடந்த அக்டோபர் மாதம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கட்சித் தொண்டர்களுக்காக திடீரென ஒரு பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
இந்த விருந்தில் சக அமைச்சரான மூர்த்தி மற்றும் மாவட்ட செயலாளர்கள் தளபதி, மணிமாறன் ஆகியோர் பங்கேற்கவில்லை. தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலரும் புறக்கணித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிவேல் தியாகராஜன் அந்த கூட்டத்தில் கட்சியில் தனக்கு எதிராக காய் நகர்த்துபவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து பேசினார்.
அன்று அவர் பேசியதாவது:-
ஜால்ரா அடிக்க மாட்டேன்
முதல்-அமைச்சரிடம் அனுமதி பெற்று தான் இந்த விருந்தை நடத்துகிறேன். கடந்த சில நாட்களாக மதுரையில் கட்சியில் கிடைக்கும் தகவல்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தைஏற்படுத்துகிறது. சிலர் இந்த விருந்தை தாங்களும் புறக்கணித்து விட்டு, மற்றவர்களையும் கலந்து கொள்ளக்கூடாது என்று மிரட்டுகிறார்கள். இதற்கு நான் கவலைப்பட போவதில்லை. பிறப்பினால், வாய்ப்பினால், கல்வியினால், அனுபவத்தினால், உழைப்பினால், திறமையினால் நான் உலக அளவில் பல முக்கியமான பொறுப்புகளில் அனுபவம் பெற்றவன். அதனால்,யாருக்கும் நான் சும்மா ஜால்ரா அடிக்க மாட்டேன். என்றைக்குமே சுய மரியாதையை நான் இழக்கவே மாட்டேன்.
தனிபாதை
செய் நன்றி மறந்தவர்களுக்கு என்றாவது ஒரு நாள் வீழ்ச்சி ஏற்படும். அரசியல், பொதுவாழ்வை விட்டு நான் விலகும் வரை, என்றைக்கும் அவரை போய் பார்க்காதே, அந்த நிநிகழ்ச்சிக்கு போகாதே, அவர் பெயரை போடாதே என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் நான் பெரிய மனிதன். எனக்கு இது எல்லாம் தேவையில்லை. எனது தந்தை பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மறைந்தபோது, என்னை தலைவர் கருணாநிதி அழைத்து, என்னுடன் நீ இருக்க வேண்டும் என்றார். ஆனால் அந்த சூழ்நிலையில் அவரது அழைப்பை என்னால் ஏற்க முடியவில்லை. அன்றைக்கு இருந்திருந்தால் அமைச்சர் வாய்ப்பு அப்போதே வந்து இருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை நான் வேண்டாம் என்றேன். எத்தனை பேர் அமைச்சர் பொறுப்பை வேண்டாம் என்று கூறி இருக்கிறார்கள். நான் யாருடனும் போட்டியிடும் ஆள் இல்லை. நான் தனிப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன். இது எனக்கு போதும்.
இவ்வாறு அவர் பேசி இருந்தார்.
கூட்டுறவு துறை மீது விமர்சனம்
இப்படி கட்சி நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்து பேசிய பழனியில் தியாகராஜன் மீது இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அவர் தற்போது சக அமைச்சர் மட்டுமல்ல கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஐ. பெரியசாமி அமைச்சர் பதவி வகித்து வரும் கூட்டுறவு துறை பற்றி கடும் விமர்சனம் செய்துள்ளார். கூட்டுறவுத் துறையில் பணிகள் திருப்திகரமாக இல்லை என அவர் விமர்சனம் செய்து பேசினார்.
பதிலடி கொடுத்த ஐ. பெரியசாமி
அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஐ. பெரியசாமி 'கூட்டுறவுத் துறையில் எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது. எங்கே தவறு நடக்கிறது என்பதை அவரிடம் (பழனிவேல் தியாகராஜன்) தான் கேட்கவேண்டும். மக்கள் திருப்தி அடைவதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். 7 கோடி மக்களும் முதல் அமைச்சரும் திருப்தி அடையவேண்டும். அதற்காக தான் நாங்கள் பணியாற்றுகிறோம். என்னுடைய பணியில் திருப்தி இல்லை என்று சொல்வதற்கு வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருப்தி அடையும் வகையில் நான் பணியாற்றி வருகிறேன். வேறு யாரையும் திருப்தி படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் 50 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கிறேன்.ரேசன் கடையை பற்றி தெரியாதவர்கள் திருப்தி அடையவில்லை என்றால் அதுபற்றி எனக்கு கவலை என்று கடுமையாக பதிலடி கொடுத்து இருந்தார்.
விட்டு பிடிப்பா?
இப்படி முதலில் கட்சி பின்னர் ஆட்சி என பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து செய்து வரும் விமர்சனங்களை தி.மு.க. மேலிடம் கண்டு கொள்கிறதா அல்லது கண்டு கொண்ட பின்னரும் விட்டு பிடித்து நடப்பது நடக்கட்டும் என தட்டி விடுகிறதா என தெரியவில்லை. ஆக ஒன்று மட்டும் தெரிகிறது பழனிவேல் தியாகராஜன் அன்று பேசியது போல் அவர் யாருக்கும் பயப்படாமல் தனக்கென ஒரு தனி பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.
பா.ஜ.க. விமர்சனம்
இதற்கு இடையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா இந்த பிரச்சனையை கையில் எடுத்து பேசி இருக்கிறார் கூட்டுறவு துறையின் செயல்பாடுகள் சரியில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்திருக்கிறார். அவர் கூறியது போல் சரியில்லை என்றால் அவர் கூறியது உண்மை என்றால் அதற்கு பொறுப்பான துறை அமைச்சர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் கூறியதில் உண்மை இல்லை என்றால் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமர்சனம் செய்து உள்ளார்.
ஆக தி.மு.க.வில் நடந்து வரும் இந்த கோஷ்டி பூசல் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருத்தரால் விமர்சனம் செய்யும் அளவுக்கு வீதிக்கு வந்துவிட்டது. இப்படி தொடர்ந்து செய்து வரும் விமர்சனங்களால் எல்லை மீறி செல்லும் பழனிவேல் தியாகராஜன் மீது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu