ரேஷன் கடையில் கைரேகை பிரச்சனையா? இந்த அறிவிப்பை படிங்க..

ரேஷன் கடையில் கைரேகை பிரச்சனையா? இந்த அறிவிப்பை படிங்க..
X
ரேஷன் கடைகளில் கைரேகை பிரச்சனையில் மக்கள் தவித்து வரும் நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் மூலம் கைரேகை பதிவு செய்து அரிசி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் வழங்கி வருகிறது. அவ்வாறு கைரேகை பதிவு செய்யும் பட்சத்தில் பல்வேறு தொழில்நுட்ப காரணங்களாலும், முதியோரின் விரல் ரேகை ஸ்கேன் செய்வதில் ஏற்படும் சிரமத்தாலும் மக்கள் பெரும்பாலானோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் பொருட்களை விநியோகிப்பதில் ஊழியர்கள் பெரும் சிக்கலுக்கு ஆளாக நேரிடுகிறது. மேலும் பொருட்களை வழங்காமல் மக்களை திருப்பி அனுப்பும் நிலையும் உருவாகிறது.

இது குறித்த புகார்கள் தமிழக அரசுக்கு குவிந்த நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாயவிலைக் கடைகள் வாயிலாகக் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கும்போது கைவிரல் ரேகை சரிபார்ப்பு முறை பின்பற்றப்படுகிறது.

ஆதார் இணையத் தரவுத் தளம் வேலை செய்யவில்லை என்றும், இதனால் விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ள இயலவில்லை என்றும் இதனால் சில பகுதிகளில் நியாயவிலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்கள் வழங்கப்படாமல் குடும்ப அட்டைதாரர்கள் திருப்பிவிடப்படும் நேர்வுகள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 22.02.2022 முதல் விரல்ரேகை சரிபார்க்கும் நடைமுறையில் இடையூறுகள் நமது மாநிலத்தில் மட்டுமன்றிப் பரவலாக இதர மாநிலங்களிலும் நிகழ்ந்துள்ளன. இவை தொடர்புடைய நிறுவனங்களின் (இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின்) - (Unique Identification Authority of India - UIDAI) உயர் அலுவலர்களின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்பட்டுச் சரி செய்யப் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே பரவலாக இணைய இணைப்பு / தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத காலங்களில் உடனடியாக கைரேகை சரிபார்ப்பின்றி இதர வழிமுறைகளில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய கண்காணிப்புடன் தவறாது இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்படவேண்டும்.

அனைவருக்குமான பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பண்டங்கள் தரமாக விநியோகம் செய்யப்பட்டு உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட வேண்டும். நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே அட்டைதாரர்கள் அவர்களது குடும்ப அட்டைக்கான இன்றியமையாப் பண்டங்களை நியாயவிலைக் கடைகளிலிருந்து எந்தவித சிரமமுமின்றிப் பெற்றுக் கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story