மதுரை வந்த தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மரியாதை செலுத்தினார் நிதி அமைச்சர்
புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் வகையில் தமிழக அரசு சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்தியை தயார் செய்து இருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்த அலங்கார ஊர்தி இடம் பெற்றது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் காட்சி படுத்தப்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, கொடியசைத்து துவங்கிவைத்தார்.
இதன் ஒரு பகுதியாக மதுரை நோக்கி ஒரு ஊர்தி வந்தது, இதற்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மதுரை- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மேலூர் தாலுகா சூரப்பட்டி கிராமத்துக்கு நேற்று முன்தினம் வந்த போது, அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் அதிகாரிகள் மேளதாளம் முழங்க மலர்கள் தூவி வரவேற்பு கொடுத்தனர்.
அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் திரண்டு வந்து அலங்கார ஊர்தி முன்பு நின்று போட்டோ எடுத்து கொண்டனர். அதன் பிறகு அந்த வாகனம் மதுரை தெப்பக் குளம் நோக்கி புறப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசின் அலங்கார அணி வகுப்பு ஊர்தி 28ம் தேதி மாலை தெப்பகுளம் மைதானத்துக்கு வந்து சேர்ந்தது. விடுதலைப்போரில் தமிழகம் என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் தயார் செய்யப்பட்டு உள்ள இந்த அலங்கார ஊர்தியில் சுதந்திர போராட்ட வீரர்களான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார், மருது சகோதரர்கள், வீராங்கனை குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், ஒண்டிவீரன், புலித்தேவன், அழகு முத்துக்கோன் மட்டுமின்றி வேலூர் சிப்பாய் புரட்சி, காளையார் கோவில் கோபுரம் ஆகிய அம்சங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (30-1-2022) நண்பகல் 12.15 மணியளவில் இந்த ஊர்தியை பார்வையிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. ஊர்தியை பொதுமக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து அலங்கார ஊர்தி முன்பாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.
தமிழக அரசின் இந்த அலங்கார ஊர்தி மதுரை வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில் நாளை வரை பொதுமக்கள் பார்வைக்காக இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu