அரசு வழக்கறிஞர்களுக்கு கட்டணம்: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்).
அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டண பில்களில் ஒரு சதவீதம் பில்களுக்கான கட்டணம் கூட வழங்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதற்கான காரணம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
அரசு வழக்கறிஞருக்கு கட்டணம் வழங்குவது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கட்டணம் வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள பொதுத்துறை செயலாளரை சிறப்பு செயலாளராக நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதேபோல, அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணங்களை உடனுக்குடன் வழங்குவதற்காக ஒவ்வொரு துறையிலும் துணைச் செயலாளர் அந்தஸ்து அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டதுடன், அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணங்களை வழங்க இணையதளம் உருவாக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு பின் இந்த புதிய நடைமுறையின் செயல்பாடு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் 15 வரை அரசு வழக்கறிஞர்கள் 4 ஆயிரத்து 638 கட்டண பில்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அவற்றில் 943 பில்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 8 பில்களுக்கான கட்டணங்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட கட்டண பில்களில் ஒரு சதவீத பில்லுக்கு கூட கட்டணம் செலுத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஏன் ஒரு சதவீதத்துக்கும் குறைவான பில்களுக்கு மட்டும் கட்டணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இதற்கான காரணம் என்ன, எப்படி நிவர்த்தி செய்ய முடியும் என்பது குறித்தும் அறிக்கையில் தெளிவுபடுத்தவும் தலைமை செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu