பென்ஷனுக்கு போராடும் தியாகியின் மகள்: ஹோட்டலில் பாத்திரம் கழுவும் அவல நிலை
சுதந்திர போராட்ட தியாகியின் மகள் இந்திரா
சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கிய ஐ.என்.ஏ. அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு இந்திய சுதந்திர போராட்டத்திற்காக தீவிரமாக போராடியவர் மாடசாமி. தான் பணிபுரிந்தபோது சேமித்து வைத்திருந்த 7000 டாலரையும் ஐ.என்.ஐ அமைப்பின் வளர்ச்சிக்காக கொடுத்தார். இன்றைய சுதந்திர இந்தியாவில் அவரது மகள் இந்திரா, கடன் வாங்கி அறுவை சிகிச்சை செய்து கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருவது ஒருபுறம், வீட்டு வாடகை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் தனது உடல்நிலை பாதிப்பையும் கருத்தில் கொள்ளாமல் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவி, அங்கு கொடுக்கும், உணவினை சாப்பிட்டு, தனது வாழ் நாட்களை நகர்த்தி வருவது காண்பவரை கண்கலங்க வைக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. ஆரம்ப காலகட்டத்தில் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த இவர் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கியே ஐ.என்.ஏ. அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு இந்திய சுதந்திர போராட்டத்திற்காக தீவிரமாக போராடினார்.
அதுமட்டுமின்றி தான் பணிபுரிந்தபோது சேமித்து வைத்திருந்த 7000 டாலரையும் ஐ.என்.ஐ அமைப்பின் வளர்ச்சிக்காக கொடுத்தார். ஐ.என்.ஐ. அமைப்பில் இணைந்து அசாம், மணிப்பூர் பகுதியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து தியாகி மாடசாமி போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, இருட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு ஆங்கிலேயர்களின் சித்திரவதைக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சுதந்திரத்திற்கு பின்பு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மாடசாமிக்கு தாமரை பட்டயம் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி மத்திய அரசு சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான பென்ஷன் தொகை வழங்கப்பட்டது. தியாகி மாடசாமிக்கு, வள்ளியம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் இருந்தனர். இதில் இந்திரா என்ற கடைசி மகளை தவிர மற்றவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்திராவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் திருமணமாகாமல் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு தியாகி மாடசாமி உயிரிழந்தார் இதையடுத்து அவர் பெற்றுவந்த பென்ஷன் தொகை அவரது மனைவி வள்ளி அம்மாளுக்கு வழங்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு வள்ளியம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து தனது பெற்றோர்கள் இறந்துவிட்டதால் தன்னை கவனிக்க வேறு யாரும் இல்லை, வாழ்வாதாரம் இல்லை என்பதால் தந்தையின் பென்ஷன் தொகையை தனக்கு தர வேண்டும் என்று இந்திரா அரசுக்கு விண்ணப்பம் செய்தார்.
ஆனால், அரசு தர மறுக்கவே இந்திரா இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலச் சங்கத்தின் உதவியுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு தியாகி மாடசாமியின் பென்ஷன் தொகையை இந்திராவிற்கு வழங்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் கேட்ட அனைத்து ஆவணங்களையும் இந்திரா நான்கு முறை ஒப்படைத்த பிறகும் இதுவரை அவருக்கு பென்ஷன் வந்தபாடில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஒன்பது ஆண்டுகள் ஆகி இதுவரை இந்திராவிற்கு பென்ஷன் கிடைக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்து மரியாதை செய்து வருகிறது. ஆனால் பென்சன் தொகை குறித்து கேட்டால் எவ்வித பதிலும் இல்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள இந்திரா ஏற்கனவே கடன் வாங்கி அறுவை சிகிச்சை செய்து கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறார். வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் தனது உடல்நிலை பாதிப்பையும் பொருட்படுத்தாமல் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவி, அங்கு கொடுக்கும், உணவினை சாப்பிட்டு, வாழ்ந்து வருகிறார். அந்த வருமானம் அவருடைய மருத்துவச் செலவுக்கு மட்டுமே பயன்படுவதால் வேறுவழியின்றி பலரின் உதவியை நாடும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் மாவட்ட நிர்வாகம் கேட்கும் ஆவணங்களை கொண்டு கொடுப்பதற்கும் அதற்கு தயார் செய்வதற்கும் கடன் வாங்கித் தான் செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளார். கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கும் தனக்கு ஏன் பென்சன் தொகை கேட்டால் தர மறுக்கிறீர்கள் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டால், தங்களது விண்ணப்பம் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்ட போது மத்திய அரசு தமிழக அரசிடம் இருந்து தங்களுக்கு இது தொடர்பாக எவ்வித கோப்பும் வரவில்லை என்று பதில் கூறியுள்ளனர். அடுத்த வேளை உணவிற்காக ஹோட்டலில் பாத்திரம் கழுவி வரும் தியாகியின் மகள் இந்த பென்ஷன் தொகையை மத்திய அரசிடம் கேட்டுப் பெற டெல்லிக்கு போக வேண்டுமா என்ற கேள்விதான் எழுகிறது.
சுதந்திர போராட்ட தியாகிகளின் பெண் குழந்தைகளுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கு தியாகிகள் பென்சனை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற விதி இருந்தும், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தியாகியின் மகள் இந்திராவிற்கு உதவித்தொகை தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளது வியப்புக்குரியதாக இருக்கிறது. சுதந்திர தினம் குடியரசு தினம் என விழாக்களின் கொடியேற்று நிகழ்வின்போது சுதந்திர போராட்ட தியாகிகள் என்ற அடிப்படையில் இந்திராவிற்கு மரியாதை செய்து இனிப்பு வழங்கும் அரசு அவருடைய கோரிக்கைக்கு மட்டும் தற்போது வரை கசப்பினை வழங்கிவருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது கோவில்பட்டி தாசில்தார் அமுதா மற்றும் அரசு அதிகாரிகள் இந்திரா வசிக்கும் வீட்டிற்கு நேரில் வந்து மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu