அனைத்து குடும்பங்களுக்கும் விரைவில் குடும்ப சுகாதார அட்டை: அமைச்சர் தகவல்

அனைத்து குடும்பங்களுக்கும் விரைவில் குடும்ப சுகாதார அட்டை:  அமைச்சர் தகவல்
X

அமைச்சர் மா சுப்ரமணியன்

தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் விரைவில் குடும்ப சுகாதார அட்டை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

குடும்பங்களுக்கும், குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக, இது செயல்படுத்தப்படும். இந்த அட்டையில், குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, தொழில், மருத்துவ குறிப்புகள் இடம் பெற்று இருக்கும்.

இத்திட்டத்தின் கீழ், வீடுகளுக்கே நேரில் சென்று, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டு, உரிய சிகிச்சையும் அளிக்கப்படும். சென்னை மாநகராட்சி பகுதியில், சில குடும்பங்களுக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தொலை துாரங்களில் உள்ள கிராம பகுதிகள், மலைப் பகுதிகள், மிகவும் பின்தங்கிய பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தியதால், சென்னையில் இந்த திட்டம் சற்று தாமதமாக துவக்கப்பட்டு உள்ளது. அனைத்து குடும்பங்களுக்கும் விரைவில் குடும்ப சுகாதார அட்டை வழங்கப்பட்டு விடும்.

மாநிலம் முழுவதும் 5 கோடியே 98 லட்சம் பெரியவர்கள் உள்ளனர். அவர்களில், 4 கோடியே 48 லட்சம் பேர், கடந்த ஓராண்டில் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 33 லட்சம் பேர், உயர் ரத்த அழுத்தம்; 23 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகிய இரண்டும், 16 லட்சம் பேருக்கு இருக்கிறது. சென்னையில் இதுவரை 17 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் உயர் ரத்த அழுத்த பிரச்னையாலும், ஒரு லட்சத்து 5,000 பேர் சர்க்கரை வியாதியாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கூறினார்

இவர்கள் அனைவருக்கும் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று, மருந்துகள் வழங்கி வருகின்றனர். இதுவரை 83 லட்சம் மருந்துகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!