மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு

மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு
X

கோப்புப்படம் 

புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

‘மிக்ஜம்' புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை நின்று 36 மணி நேரம் கடந்தும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளது.

பொதுமக்கள் மின்சாரமின்றி, குடிநீர் வசதியின்றி, இயற்கை உபாதைகளுக்கு இடமின்றி அல்லலுற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், பல வீடுகளுக்குள் மழைநீர் உட்புகுந்ததன் காரணமாக அங்கு வைக்கப்பட்டுள்ள மரச் சாமான்கள், தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் என பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் மழை நீரினால் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக பலத்த நிதிச் சுமை பெரும்பாலான குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ள நீர் தேங்கியுள்ள பல பகுதிகளில் இன்னும் மின் விநியோகம் சீராகவில்லை. இந்நிலையில் இந்த மாதம் மின் கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 18 ஆம் தேதி வரை அபாரதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 03.12.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜம் புயலாக வலுவெடுத்து 04.12.2023 அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து , அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 3 தினங்களாக மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

1. மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 04.12.2023 முதல் 07.12.2023 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழலின் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 18.12.2023 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

2. ஏற்கனவே, மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணத்துடன் 04.12.2023 முதல்

06.12.2023 வரை அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு 4 மாவட்ட மக்களும் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம். மின்கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில், கூடுதல் அவகாசம் வழங்கி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!