ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 11 வது முறையாக கால அவகாசம் நீட்டிப்பு-தமிழக அரசு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 11 வது முறையாக மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலைக்குறைவு காரணமாக 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அதன்படி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், அரசு அதிகாரிகள், அப்போலோ செவிலியர்கள், அப்போலோ மருத்துவர்கள் என நிறைய பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் விசாரணை ஆணையத்திற்கு வழங்கப்பட்ட 3 மாத அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் 6 மாதம் அவகாசம் வழங்குமாறு அப்போதைய பொதுத்துறை செயலாளருக்கு நீதிபதி ஆறுமுகசாமி கடிதம் எழுதினார்.
பிரமாணப் பத்திரங்களை அளித்த பலரிடம் இன்னும் விசாரிக்க வேண்டியிருப்பதால் அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அப்போதும் மேலும் 6 மாதங்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
100 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் காலதாமதம் செய்யப்படுவதாக கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஆணைய வழக்கறிஞர் பார்த்தசாரதி, விசாரணை தொடங்கப்பட்ட போது யார் யாரெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும் என எந்த பட்டியலையும் அரசு தரவில்லை.
ஆணையம் தானாக முன்வந்து போயஸ் தோட்டத்தில் துவங்கி, அப்போலோ மருத்துவமனை வரை விசாரணைக்கு தொடர்புடையவர்கள் எனக் கருதிய, 100 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரித்துள்ளது எனத் தெரிவித்தார்.
தற்போது மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றுள்ள நிலையில் ஆணைய பணிகளை நிறைவு செய்ய, மேலும் அவகாசம் தேவை எனக் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்ததாகவும் அதன்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 11 வது முறையாக கால அவகாசம் நீட்டிப்பு தமிழக அரசு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu