டாஸ்மாக் கொள்ளை: தடுக்க இந்த அரசாவது முன்வருமா?

டாஸ்மாக் கொள்ளை: தடுக்க இந்த அரசாவது முன்வருமா?
X
டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதால் வருடத்திற்கு சுமார் 5000 கோடி இழப்பு ஏற்படுகிறது.

பொதுவாக தமிழகம் முழுவதும் உள்ள தமிழக அரசு மதுபான கடைகளான டாஸ்மாக்கில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. சாதாரண கடைகளில் குவாட்டருக்கு 10 ரூபாய் அதிகமாகவும், புல்பாட்டிலுக்கு 40 ரூபாயும் அதிகமாக விற்கப்படுகிறது. எலைட் கடைகளில் 80 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது.

இது குறித்து குடிமகன் ஒருவர் கூறுகையில், எலைட் மதுபான கடைகளில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. கூடுதல் விலை மூலம் ஒரு நாளைக்கு ரூ.20,000/- அதிகமாக வசூலிக்கிறார்கள். சாதாரண மதுபான கடைகளில், ஒரு நாளில் குறைந்தபட்சம் மூன்று லட்சம் வரை விற்பனையாவதில் கூடுதல் விலையாக ரூ.30.000/- வசூலிக்கிறார்கள் என்று கூறினார்.

இது குறித்து மேலும் விசாரித்ததில், எலைட் கடைகளில் அதிகவிலை வைத்து விற்க அதிகாரிகள் கூறுவதாக பணியாளர்கள் கூறுகின்றனர். ஒரு கடையில் நான்கு பணியாளர் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், கூடுதல் விலை மூலம் பெறப்படும் தொகையை பங்கிட்டால், ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.5,000/- கிடைக்கும். ஒரு மாதத்திற்கு ரூ. ஒரு லட்சத்து 50,000.

நாம் சொல்வது ஒரு கடைக்கான தொகை மட்டுமே. தமிழகம் முழுவதும் 5338 கடைகள் உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.140 கோடி வரை விற்பனையாகிறது. இதில் கூடுதல் விலைக்கு விற்கப்படும் தொகை மட்டும் 12 கோடி முதல் 13 கோடி வரை இருக்கும். வருடத்திற்கு ரூ.4700 கோடி வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

நாம் கேட்பதெல்லாம், படித்து பட்டம் பெற்று ஆசிரியராக இருப்பவருக்கும், போட்டித்தேர்வு எழுதி அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கும் சம்பளமாக மாதம் ஒரு லட்சம் கிடைக்காது. அப்படியே இருந்தாலும், வருமான வரி பிடித்தம் இருக்கும்.

ஆனால், டாஸ்மாக் கடைகளில் இருப்பவர்களுக்கு வருமான வரி இல்லாமல், ஒரு மாதத்திற்கு ரூ.1,00,000/- கிடைக்கிறது.

உயர்நீதிமன்றம் மதுபான கடைகளில் விற்பதற்கு ரசீது தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதனை இன்னும் செயல்படுத்தவில்லை.

இதில் யார்யாருக்கெல்லாம் பங்கு செல்கிறது என தெரியவில்லை. பணியாளர்கள் மட்டுமே இதனால் பயனடைகிறார்கள் என கூற முடியாது. அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களால் இப்படி செய்ய முடியாது. இது குறித்து அரசு தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை நிறைவேற்றி வருகிறது. பல்வேறு துறைகளில் நடக்கும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் வசூலிக்கப்படும் கூடுதல் தொகை அரசாங்கத்திற்கு சேராமல் தனி நபருக்கு சென்றடைவதை தடுக்க இந்த அரசாவது முன்வருமா?

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்