லஞ்ச ஒழிப்புத் துறை முன்பு ஆஜராக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு ஒருமாதம் அவகாசம்

லஞ்ச ஒழிப்புத் துறை முன்பு ஆஜராக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு ஒருமாதம் அவகாசம்
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு ஆஜராக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் கோவையைச் சேர்ந்த வேலுமணி. கடந்த அதிமுக ஆட்சியில் மாநகராட்சி டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் வேலுமணி, அவரது சகோதரர் அன்பு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.

இதில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், வருமானத்திற்கு எதிராக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்தது. அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் வேலுமணி, அவரது சகோதரர் அன்பு உள்ளிட்டோருக்கு கடந்த மாதம் 23 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியது. கடந்த 29 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அதில் உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராவதற்கு ஒரு மாதம் அவகாசம் கோரி வேலுமனி சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் வேலுமணி உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், விசாரணைக்கு ஆஜராக ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் எனவும், கேள்வி தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் விசாரணையின் போது ஆடிட்டரை உடன் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, விசாரணையை இழத்தடிக்கும் முயற்சியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, அவரது சகோதரர் அன்பு உள்ளிட்டோர் ஆஜராக ஒரு மாதம் அவகாசம் அளித்ததோடு, ஆடிட்டரை உடன் வைத்திருக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Next Story
ai in future agriculture