கிரிப்டோ கரன்சியா? அப்படீன்னா? அப்பாவியாக கேட்கிறார் தங்கமணி
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ரெய்டுக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜிதான் காரணம் எம்.எல்.ஏ. தங்கமணி குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுபற்றி, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், என் வீட்டிலும், என்னை சார்ந்தோர், கட்சியினர் உள்ளிட்ட பலர் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது. என் வீட்டில் இரண்டு கோடியே, 16 லட்சம் கிடைத்ததாக சொல்லியுள்ளனர். என் வீட்டில் இருந்து என் செல் போன் மட்டுமே எடுத்து சென்றுள்ளனர். தவறான தகவலை செய்தியாக வெளியிட்டு வருகின்றனர்.
காலை 06:30 மணிக்கு வந்தார்கள். இரவு 08:30 மணிக்கு சென்று விட்டனர். என் செல் போன் மட்டும் எடுத்துக்கொண்டு, கையொப்பம் பெற்று சென்றுள்ளனர். பழி வாங்கும் நோக்கத்தில் இது போல் செய்து வருகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் இதற்கு அஞ்ச மாட்டோம். கழக தொண்டர்கள் வெயில் என்றும் பாராமல் எத்தனை பேர், எவ்வளவு நேரம் காத்திருந்தார்கள் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். காலையில் இருந்து எனக்கு அதரவாக வந்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பொதுதேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, கரூரில் ஒரு துக்க நிகழ்ச்சியில் இருக்கும் போது, அங்கு சென்ற பரமத்தி ஒன்றிய பெருந்தலைவரிடம், இன்னும் மூன்று மாதத்தில், நான் மின்துறை அமைச்சர் ஆக போகிறேன். உங்கள் அமைச்சர் மட்டுமல்ல. அவரின் குடும்பத்தையே, அவர், அவரின் மகன், அவரின் மனைவி ஆகிய மூன்று பேரையும் கருவறுக்க போகின்றேன், என்று சொல்லியுள்ளார்.
இதுபற்றி, அப்பகுதி அதிமுக நிர்வாகிகள் சிலரும், என்ன இவர் இப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார்? என்று போனில் சொன்னார்கள். எனது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது, ஒரு மணி நேரம் காக்க வைத்துவிட்டு பின்னால் வழியாக வெளியில் சென்று பழி வாங்கினார். இவரது சுயரூபம் தெரிந்து அவரிடமிருந்து பதவியை எடுத்து, அந்த பதவியை முன்னாள் முதல்வர் அம்மா என்னிடம் கொடுத்தார்கள். அதன் பின் அவர் எத்தனை கட்சிக்கு சென்றார் என்பது உங்களுக்கு தெரியும்.
தி.மு.க. தலைமையில் சொல்லி என்னை பழி வாங்கும் எண்ணத்தை, இன்று அவர் தீர்த்துக்கொண்டார். எனக்கு கவலை இல்லை. நான் சட்டத்தை நம்புபவன், நீதியை நம்புபவன். நான் 4. 80 ஆயிரம் கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சொல்லுகிறார்கள். என் மகன் தொழில் செய்கின்றார். அதுவும் முழுமையான ஆடிட்டிங் அக்கவுண்ட் உள்ளது. இதனை நீதி மன்றத்தில் சந்தித்து கொள்வேன். இன்று ரைடு நடைபெற்றதற்கு முழு காரணம் செந்தில் பாலாஜிதான். செந்தில் பாலாஜியின் முழு சுயரூபம் தி.மு.க. அரசின் முதல்வருக்கு தெரியவில்லை.
இந்த வழக்கில் நான் வெற்றி பெறுவேன். எந்த மாற்று கருத்தும் கிடையாது. இது போன்ற ரெய்டுகளால் அதிமுக எழுச்சி பெறுமே தவிர, துவண்டு விடாது. கடந்த இரு நாட்களாக அதிமுக உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. அரசை கண்டித்து இன்னும் இரு நாட்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. நான் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததாக கூறி உள்ளனர். அது என்ன என்றே தெரியாது. என்னை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் வீடுகளிலும் ரெய்டு நடத்தி உள்ளனர். அவர்களையெல்லாம் சந்தித்துவிட்டு, மீண்டும் நான் உங்களை (பத்திரிக்கையாளர்களை) சந்திக்க உள்ளேன். இவ்வாறு, தங்கமணி எம்.எல்.ஏ. கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu