முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்காவல் 33வது முறையாக நீட்டிப்பு
![முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்காவல் 33வது முறையாக நீட்டிப்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்காவல் 33வது முறையாக நீட்டிப்பு](https://www.nativenews.in/h-upload/2024/04/17/1891783-santhu.webp)
கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜி (கோப்பு படம்).
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாளை மறுநாள் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் சிறையிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கஸ்டடியில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அதன்பிறகு தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி தனது உடல்நலனை காரணம் காட்டி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை ஜாமீன் கோரினார்.
ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை. இதனால் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிறையிலேயே உள்ளார். அவரது நீதிமன்ற காவல் 32 முறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவுக்கு வர உள்ளது. இதையடுத்து இன்று விசாரணை நடத்திய சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அவரது நீதிமன்ற காவலை 33வது முறையாக நீட்டிப்பு செய்தது.
அதாவது ஏப்ரல் 22ம் தேதி வரை செந்தில் பாலாஜியை சிறையிலேயே அடைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி தேர்தல் ஓட்டுப்பதிவு நாளிலும் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu