3 கோவில்களுக்கு சொந்தமான ரூ.11.28 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

3 கோவில்களுக்கு சொந்தமான ரூ.11.28 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
X

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் - கோப்புப்படம் 

நாகப்பட்டினம் மற்றும் திருப்பூரில் ரூ.11.28 கோடி மதிப்புள்ள கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் உள்ளன.

இருப்பினும், இந்த கோயில்களின் நிலங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.

அதேபோல பல இடங்களில் உரிய வாடகை செலுத்தாமலும் எவ்வித முறையான ஒப்பந்தங்கள் இல்லாமலும் பலர் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், சித்தாய்மூர், சுவர்ணதாபனேஸ்வரர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமாக திருத்துறைப்பூண்டி வட்டம், தில்லைவிளாகம் கிராமத்தில் 23.88 ஏக்கர் புன்செய் நிலம் மற்றும் 2.33 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளன. புன்செய் நிலத்தில் 16 தனிநபர்கள் வீடுகள் கட்டியும், நன்செய் நிலத்தினை தனிநபர் ஒருவரும் ஆக்கிரமித்திருந்தனர்.

இந்நிலையில் நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் குமரேசன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட உதவி ஆணையர் ராணி ஆகியோர் முன்னிலையில் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு "எச்.ஆர்.சி.இ." என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. அதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8.28 கோடியாகும்.

மேலும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காடு அனுமந்தராயர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான 10.98 ஏக்கர் நிலம் மற்றும் அதன் உபகோவிலான கோனாபுரம், லட்சுமி நாராயணசுவாமி கோவிலுக்குச் சொந்தமான 2.14 ஏக்கர் நிலம் தனிநபர் பெயரில் பட்டா பெற்றிருப்பதை அறிந்து திருப்பூர் மாவட்ட வருவாய் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் கோவில்களுக்கு சாதகமாக பட்டா மாற்றம் செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று திருப்பூர் மண்டல இணை ஆணையரின் அறிவுரையின்படி, திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் ஜெயதேவி முன்னிலையில், காவல்துறை மற்றும் வருவாய்துறை உதவியோடு கோவில்களின் நிலம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ. 3 கோடி ஆகும். ஆக மொத்தம் இன்றைய தினம் மீட்கப்பட்ட 3 கோவில்களுக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பு ரூ.11.28 கோடியாகும் என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!