டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் ரிட்டர்ன் முறை: தமிழக அரசுக்கு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி..!

தமிழகத்தில் மும்முரமாக இயங்கும் டாஸ்மாக் கடை (கோப்பு படம்)
நீலகிரி மாவட்டத்தில், 'டாஸ்மாக்' கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்று, பின் காலி பாட்டில்களை ஒப்படைத்து, கூடுதல் ரூபாயை திரும்ப பெறும் திட்டம், மே 15 முதல் சோதனை முறையில் அமலில் உள்ளது. அதைத் தொடர்ந்து, காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை, மேகமலை, டாப் ஸ்லிப் போன்ற மலைப்பிரதேசங்கள், தேசிய பூங்கா,சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில், ஜூன் 15 முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு விசார்ணை சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் வந்தது. அப்போது, காலி மது பாட்டில் வாபஸ் திட்டத்தை தமிழகம் முழுதும் ஏன் அமல்படுத்தக் கூடாது? என, நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 29 லட்சம் மது பாட்டில் விற்கப்பட்டதில், 18 லட்சத்து 50 ஆயிரம் காலி பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, ஒரு மாவட்டத்தில் மட்டும் இவ்வளவு பாட்டில்கள் திரும்ப பெற்ற நிலையில், தமிழகம் முழுதும் இந்த திட்டத்தை ஏன் அமல்படுத்தக் கூடாது? என, மீண்டும் நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பினர்.
தமிழக அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், சிறப்பு பிளீடர் சீனிவாசன் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது, மாநிலம் முழுதும் இதை அமல்படுத்துவது குறித்து, தமிழக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினர். இதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை வகுக்கும்படி, அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை, ஜூலை 15 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையடுத்து காலி பாட்டில் வாபஸ் பெறும் முறை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அமல்படுத்த வேண்டும் எனவும், அப்போது தான் வன உயிரினங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு தடுக்கப்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu