கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை
அணு சக்தித் துறையின் கல்பாக்கம் மையத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் மறுசுழற்சி ஆலை, முன்மாதிரி அதிவேக ஈனுலை (அணுமின் திட்டம்) மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையப்பிரிவுகள் உள்ளன. இந்த மையம் அவசர கால தயார் நிலை செயல்முறை சோதனை திட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் "வளாகம் தாண்டிய அவசர நிலை" ஒத்திகையை இன்று (14.12.2021) நடத்தியது. இந்த ஒத்திகை 16 கிலோ மீட்டருக்குள் இருக்கும் அவசரகால திட்ட மண்டலத்தில் நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையால் பொது இடத்தில், மாவட்ட ஆட்சியரும் இந்த ஒத்திகையின் தளபதியுமான ஆ.ர.ராகுல் நாத் தலைமையின் கீழ் நடத்தப்பட்டது. இதற்கு தேவையான தொழில்நுட்ப கூறுகளை சென்னை அணுமின் நிலைய இயக்குனர் மற்றும் வளாக அவசரநிலை இயக்குனருமான எம். பலராமமூர்த்தி தலைமையின் கீழ் இயங்கும் கல்பாக்கம் அவசரகால நிலை குழு மூலம் வழங்கப்பட்டன.
இந்த ஒத்திகையின் நோக்கம் என்னவென்றால் அணுமின் நிலையத்தில் கட்டமைப்பு மற்றும் இயங்குநிலையில் ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அதனை மாவட்ட நிர்வாகமும் அணுமின் கழக நிர்வாகங்களும் இந்நிலையை திறம்பட கையாளும் திறம் மற்றும் செயல் திட்டம் "உறுதியான பாதுகாப்பு" தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுவதை உறுதி செய்து கொள்வதாகும்.
இந்த ஒத்திகையானது கட்டளையிடு மற்றும் கட்டுப்படுத்து என்ற முறையில் பொது மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி நடத்தப்பட்டது. இதுபோன்ற ஒத்திகை இப்போதுதான் முதன்முறையாக நடத்தப்பட்டது. மேலும் இதனைப்பற்றி மாவட்ட நிர்வாகனத்தினருக்கோ அல்லது பேரிடர் மேலாண்மை முகமையைச் சேர்ந்தவர்களுக்கோ முன்னறிவிப்பின்றி எதிர்பாராத விதத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் உண்மையான தயார்நிலை பற்றியும் அவை மேலும் மேம்பாடு அடைவதற்காகவும் நடத்தப்பட்டது. ஆனால் பொது மக்களுக்கு தேவையான முன் அறிவிப்பும் அறிவுரைகளும் வழங்கப்பட்டிருந்தன.
இந்த ஒத்திகை, சென்னை அணுமின் நிலையத்தில் பிரத்யேகமாக ஒரு சம்பவம் நடந்ததாக பாவிக்கப்பட்டு ஒரு குறுகிய கால அளவில் உருவாக்கப்பட்டது. பின்னர் கல்பாக்கம் அவசரநிலை குழு அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், நிலைமைய அடுத்த கட்டத்திற்கு அதாவது வளாக அவசரநிலையாக விரிவுபடுத்தப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. பின்னர் இது வளாகம் தாண்டிய அவசர நிலையாக அறிவிக்கப்பட்டது. அப்போது மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு தனது கட்டுப்பாட்டில் எடுத்து நடவடிக்கைகைகளை மேற்கொண்டது. தற்போதுள்ள பருவநிலையில் ஒய்யாளிக்குப்பம், சட்ராஸ், கல்பாக்கம் கிராமங்களுக்கு அணுசக்தித்துறையின் வழிகாட்டுதலோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்ட வருவாய், ஊரக வளர்ச்சி, காவல், நல்வாழ்வு, தீயணைப்பு மற்றும் மீட்பு, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன்வளம், போக்குவரத்து மற்றும் மக்கள் தொடர்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் இதில் பங்கெடுத்து இந்த ஒத்திகையை சிறப்பாக நடத்தி முடித்தனர். அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் இதில் பங்கெடுத்துக்ககொண்டனர்.
அணுசக்தித்துறை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் அணுசக்தித்துறை அவசரகால நிலையை கையாளும் திட்டங்களின்படி இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், அணுசக்தித்துறை ஒழுங்கமைப்பு வாரியம், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் அணுசக்தித்துறையைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த ஒத்திகையை பார்வையிட்டு இது நல்ல முறையில் நடத்தப்பட்டதாக தங்களது திருப்தியை கருத்துக்கேட்புக் கூட்டத்தில் தெரிவித்தனர்.
அவசரகால ஒத்திகையின் மூலம் நமது மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் அவசரகால நிலையை கையாளும் திறனை கட்டளையிடு மற்றும் கடடுப்படுத்து என்ற தத்துவத்தின் அடிப்படையில் மிகச்சிறப்பாக வலுவடைந்துள்ளதாக ஆ.ர. ராகுல்நாத், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறிப்பிட்டார். பொது மக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி குறிப்பாக போக்குவரத்தில் எந்தவித பாதிப்பின்றி ஒத்திகை நடத்தப்பட்டது சிறப்பான அம்சம் என மேலும் அவர் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின்போது கா. சாகிதா பர்வின், வருவாய்க் கோட்ட அதிகாரி, செங்கல்பட்டு, மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் அதிகாரிகள் மற்றும் சென்னை அணுமின் நிலைய பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu