மழைக்காலங்களில் கடைபிடிக்க வேண்டிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்

மழைக்காலங்களில் கடைபிடிக்க வேண்டிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்
X
மழைக்காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது.

மழை காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட விழிப்புணர்வு பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வீடு மற்றும் அலுவலகங்களில் மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான வயர்கள் மற்றும் மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்து விட வேண்டும்.

பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின இணைப்பு கொடுக்க வேண்டும். மின் கசிவு தடுப்பான்களை பயன்படுத்தி மின்கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்த்திட வேண்டும்.

உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும். எந்தக்காரணத்தைக் கொண்டும் பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். கேபிள் டி.வி வயர்களை மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது.

மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள Stay wire-ன் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைக்கும் செயலைத் தவிர்க்க வேண்டும். குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சைகளைப் பொருத்தக் கூடாது.

மின்கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக் கூடாது. மின் கம்பங்களை பந்தல்காளக பயன்படுத்தக் கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. மழைகாலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வுப் பெட்டிகள் ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது.

மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லக் கூடாது. அப்படி இருந்தால் உடனே அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுக வேண்டும்.

மின்சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில்,சுவிட்சை ”ஆப்” செய்து வைக்கவும். இடி அல்லது மின்னல் ஏற்படும்போது வெட்டவெளியில் இருக்கக் கூடாது. உடனடியாக கான்கிரிட் கூரையிலான பெரிய கட்டடம், வீடு போன்ற பெரிய கட்டடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடைய வேண்டும்.

இடி அல்லது மின்னல் ஏற்படும்போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக்கூடாது. ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், பலகைகளை ஒருபோதும் இயக்கவோ அணைக்கவோ அல்லது தண்ணீரில் உட்கார்ந்திருக்கவோ கூடாது.

பால்கனி பகுதி மற்றும் மொட்டைமாடியில் திறந்த வெளியில் உள்ள மின்சாதனங்கள், பிளக் பாயிண்டுகள் மழை நீர் புகாத வண்ணம் மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இடி அல்லது மின்னல் ஏற்படுபோது டி.வி. மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இடி அல்லது மின்னல் ஏற்படும்போது திறந்த நிலையில் உள்ள ஜன்னல்,கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story