தமிழகத்தில் திரும்பப் பெறப்பட்டது பறக்கும் படை சோதனை! மாநில எல்லைகளில் நீடிக்கும்
வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் - கோப்புப்படம்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் நடத்தை விதிமீறல்களைத் தடுக்க அனைத்து தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலைக் குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்திருந்தது. அவை, வாகனச் சோதனை மற்றும் புகார்கள் அடிப்படையில் வீடுகள், அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வந்தன. அந்த வகையில், தமிழகத்தில் ரூ.174.85 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1,083.77 கோடி மதிப்பிலான தங்கம் உட்பட ரூ.1,301 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது, வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், பறக்கும் படை மற்றும் நிலைக்குழுக்கள் சோதனையை திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில், பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்படுகின்றன. இதுதொடர்பான அறிவுறுத்தலை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இருப்பினும் தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் அமலிலேயே உள்ளன.
மாநில எல்லையில் தொடரும்: அதேநேரம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வரை அம்மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக எல்லை மாவட்டங்களில் மட்டும் தேவைப்படும் இடங்களில் பறக்கும் படை மற்றும் நிலைக் குழுக்கள் தங்கள் பணிகளைத் தொடரும். உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லும் ரொக்கத்துக்கான உச்சவரம்பு ரூ.50 ஆயிரம் என்பதில் மாற்றம் இல்லை.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, இந்த அறிவிப்பு வணிகர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறி, தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu