ஈரோடு இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை...
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்த போது, தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்களில், 7 ஆயிரத்து 947 பேர் இறந்துவிட்ட நிலையில் அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என தெரியவந்தாதகவும், 30 ஆயிரத்து 56 வாக்காளர்கள் தொகுதியில் வசிக்கவில்லை என்பதும் தெரிய வந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பு கேமரா பதிவு செய்ய வேண்டும், வீடியோ பதிவு செய்ய வேண்டும், வாக்குப்பதிவு எந்திரம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதாகவும், அந்த உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆனி ஜோசப் தாக்கல் செய்த அறிக்கையில், தேர்தல் நடைமுறைகள் துவங்கிய பின் அதில் தலையிடும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.
வெறும் யூகங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், தேர்தலில் முறைகேடுகள் நடக்கும் என மனுதாரர் அச்சம் தெரிவிக்க எந்த காரணங்களும் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொகுதியில் வசிக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளதாக கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், அது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு என்றும் முறைகேடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இறந்தவர், தொகுதியில் வசிக்காதவர்களின் பட்டியல் தேர்தல் அலுவலரிடம் வழங்கப்பட்டு, அதை சரிபார்த்த பிறகே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் எனவும், இறந்தவர், தொகுதியில் இல்லாதவர்கள் பட்டியல் ரகசியமானது எனவும், அதை வெளியிட்டால் ஆள்மாறாட்டம் செய்ய வாய்ப்பு உண்டு எனவும் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
வாக்குச்சாவடி சீட்டுகள் கட்சி முகவர்களால் விநியோகிக்க அனுமதிக்கப்படுது இதில்லை என்றும், தேர்தல் அலுவலர்கள் மூலம் மட்டுமே அந்த சீட்டுகள் விநியோகிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பணப்பட்டுவாடாவை தடுக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், தொகுதியில் உள்ள 238 வாக்கு சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா, வெப் காஸ்டிங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், எந்த புகாருக்கும் இடம் தராத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தொகுதியில் 409 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகவும், பதட்டம் நிறைந்த 34 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணைய அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu